பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/319

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருநாவுக்கரசர்
315
 

கலத்தல் இயலாது. அவன் தன்மாட்டே அன்பு காட்டுதலை ‘அன்பு' என வழக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அது சுயநலம், அன்பன்று; அவமேயாம்.

ஒருவன் தன்மாட்டே, தான் அன்பு காட்டிக் கொள்ளுதல் தீமையையே பெருக்கும்; இன்பத்தினைப் பெருக்காது. அதனாலேயே அன்பு காட்டுதற்குரிய களமாக விலங்குகள் போலல்லாது மனித சமுதாயத்தை ஒரு கூட்டியல் வாழ்க்கையாக இயற்கை அமைந்துள்ளது. மனித சமுதாயத்தில் அரக்கனைத் தவிர, தனி மனிதனே இல்லை; ஞானியானால் இறையுடன் தோழமை கொண்டு ஒன்றிக் காதலித்து இன்புறுவர். அவர்களுக்கும் இறைவன் என்று ஒரு தோழணுண்டு. இவன் அவனைக் காதலிக்க, அவன் இவனைக் காதலிக்க மிகப் பெரிய ஞானக்காதல் வாழ்வு மலர்கிறது; எனவே மனித உயிர் குறைகளினின்று விடுதலை பெற அன்பினாற் கலந்தஉறவு தேவை. உறவு தோன்றி வளர்தற்குரிய சூழ்நிலைகள் பலவற்றுள் பலர் ஒருங்கிருந்து உண்ணும் சூழ்நிலையே சிறப்புடைய சூழ்நிலையாகும். அதனாலேயே வள்ளுவம், பகுத்துண்ணலைத் தொடர்ந்து 'பல்லுயிர் ஒம்புதல்' என்று பேசியது. திருமுறைகளும் திருக்குறளும், விருந்தோம்பலை நெறிகளுக்கெல்லாம் உயர்ந்த நெறி என்று எடுத்தோதுகின்றன.

மனித உறவுகளுக்குக் கொடிய பகைமையாகிய அழுக்காறு, பிற கட்டங்களில் தலைகாட்டுதல் போல உண்ணும்பொழுது தலைகாட்டுதல் இயலாது. அளவுக்கு மிஞ்சிக் குவித்து வைக்கின்ற செல்வத்தைப் போலல்லாமல், அளவோடு உண்பதலால் அழுக்காற்றுணர்வு தடை செய்யப்படுகிறது. அதோடு பிற கட்டங்களில் மனிதன் தன் மகிழ்வுணர்வைப் பூரணமாக வெளிப்படுத்தி விடுவதில்லை, உண்ணும்பொழுது தன்னுடைய நிறைவை அகன்ற ஒளி படைத்த கண்கள் மூலமும், மகிழ்வு கொப்பளிக்கின்ற திருமுகத் தோற்றத்தின் மூலமும் சுவைத்து மகிழ்ந்தமையை