பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநாவுக்கரசர்

317


காட்டிப் பேசுதல் வேண்டும். இத்தகைய உரையாடலோடு கலந்துண்ணும் பழக்கம் நமது சமுதாய வழக்கம். இந்த இனிய வழக்கம் மீண்டும் நமது சமுதாயத்தில் மலர்வதாக.

இந்த உலகை - உலக இயக்கத்தை நடத்துவது காலம். காலம் என்னும் களத்தில்தான் மனிதன் வளர்கிறான். வரலாறு உருவாகிறது. காலம் மிகவும் விழுமியது. போற்றத் தக்கது. பயன்கொள்ளத் தக்கது. காலம் என்ற நெருக்கடியை இலட்சியமாக வைத்துத்தான் மனிதன் வளர்கிறான். காலத்திற்கு இருக்கும் அருமையான வாய்ப்பு சென்ற காலம், நிகழ்காலத்தை நிர்ணயிக்கிறது; எதிர்காலத்தை உருவாக்குகிறது.

இந்த உலகில் எந்த ஒன்றையும் மனிதன் படைத்துக் கொள்ளமுடியும். ஆனால் புதியதொரு காலத்தை அவன் அமைத்துக் கொள்ள முடியாது. அதுபோலவே மனிதன் இழந்த அனைத்தையும் திரும்பப் பெறலாம். ஆனால் இழந்த காலத்தைத் திரும்பப் பெறமுடியாது. வாழ்நாள் பல வினாடித் துளிகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு வினாடித் துளியும் கழியும்போது உயிர் வாழ்க்கை கரைகிறது. மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மகிழ்விலேயே ஈடுபடும் மனப்போக்குடைய நாம் மரணத்திற்கு அஞ்சுவதால் அயர்ந்து மறந்து விடுகிறோம். நாம் அறிந்து கொண்டாலும் சரி, உணராமல் போனாலும் சரி, வாழ் நாளும் கரைந்தே போகிறது. எப்படி முயன்றாலும் வாழ்நாள் கரையத்தானே செய்யும். அதைப்பற்றிக் கவலைப்பட்டு என்ன என்றும் கேட்கலாம். ஆனால் வாழ்நாளை முற்றிலும் முழுதுமாகப் பயன்படுத்தினால் அது கரைந்து அழிந்ததாகக் கருதமுடியாது. வள்ளுவரும் “உளதாகும் சாக்காடு” என்பார். காலம் விரைந்து செல்லக்கூடியதே! அதனைத் தடுத்து நிறுத்துதல் என்பது இயலாது. ஆயினும் காலத்தின் நோக்கம் பயன்படுதலேயாம். காலம் முழுதுமாகப் பயன்பட்டிருக்குமானால் அது அழிவல்ல; ஆக்கமேயாகும். மனித உலகத்திற்கு ஒவ்வொரு வினாடித் துளியும் பயன்பட வேண்டும்.