பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/322

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
318
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

ஒரு மனிதன், தனக்குரிய பொருள் - தனது வாழ்வுக்குரிய பொருள் பிறரால் அவனறியாமல் கொள்ளை கொள்ளப்படும்போது களவு போய்விட்டது என்று கூறுகிறான். இத்தகைய களவு உடைமைகளுக்கு மட்டும் தானா? காலத்திற்கும் உண்டு. அடிக்கடி சிலர், நேரம் போனதே தெரியவில்லை என்றும் கூறுகின்றனர். இப்படிக் கூறும்பொழுது அவர்கள் இம்மியும் கவலைப்படுவதில்லை. நம்மை அறியாமல் நமது செயலுக்கும் பயன்படாமல் பயன் தராமல் வாளா கழிகின்ற காலமும் களவு போனதாகவே கருதப்படும்.

அப்பரடிகளே இங்ஙனம் கூறுகின்றார். “களவுபடாததோர் காலம்” என்பது அவர் வாக்கு உடைமைகளைப் பாதுகாக்கும் கவலை இல்லையா? பூட்டும் சாவியும் தோன்றவில்லையா? கணக்குப் பார்க்கும் பழக்கம் இல்லையா? காலம் படைத்துத் தரும் உடைமைகளுக்கு இவ்வளவு அக்கறை எடுப்பவர்கள், ஏன் மூலப்பொருளாகிய காலம் பற்றிக் கவலைப்படாது இருக்கிறார்கள்? அதுதான் புரியாத புதிர் உடைமை இழப்பு உடனடியாகத் துன்பம் தரவல்லது. ஆனால், மனம் வைத்து முயன்றால் ஈடு செய்ய வல்லது. ஆனால், காலத்தின் இழப்பே நெடிய துன்பத்தைத் தரவல்லது; ஈடு செய்ய முடியாததும்கூட. ஆனால், அதைப் பற்றி மனித உலகம் போதுமான கவலை காட்டுவதாகத் தெரியவில்லை. எப்படியும், மனிதனுக்குக் காலம் போற்றும் உணர்வு வேண்டும் என்பதற்காகவே வினாடி வரையில் பகுதி பிரித்துக் காட்டினார்கள். வினாடியை விட்டால் நிமிடத்திலாவது முடித்துக் கொள்ளட்டும் என்றும், நிமிடத்தைவிட்டால் மணிக்கணக்கில் தொலைக்காமல் இருக்கட்டும் என்றும் பகுதி பிரித்துக் காட்டினார்கள். ஆனால் நாட்கணக்கில் ஆண்டுக் கணக்கில்கூடப் பயனற்றுக் காலம் கழிக்கப்படுவதை - இல்லை, அழிக்கப்படுவதை என்னென்று கூறுவது!