பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநாவுக்கரசர்

319


காலம் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். ஆக்கத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். காலம் சென்ற அடிச்சுவடு, சாதனையின் மூலமாகத் தெரியவேண்டும். அப்பொழுதுதான் காலம் பயன்பெற்றதாகும், அங்ஙனம் இல்லாமல் “நாளை நாளை” என்று கடத்தி வாழ்வதை இயற்கை ஒரு பொழுதும் மன்னிக்காது. அப்படிப்பட்டவனுடைய காலம் சைத்தானால் களவு கொள்ளப்படும். ஆதலால், உய்திக்குப் பயன்பட வேண்டிய காலத்தைக் களவு போகாமல் உரியவாறு பயன்படுத்தி அளவுக்குட்படாத அன்பால் ஐயாறப்பனை வாழ்த்தி வாழ்ந்திடுதல் வேண்டும், என்றார் அப்பர் அடிகள். அறநெறிப்படி காலம் போற்றுதலும் சிறந்த கடமையாகும்.

வளர்மதிக் கண்ணியினானை
வார்குழ லாளொடும் பாடிக்
களவு படாததொர் காலங்
காண்பான் கடைக்கணிக்கின்றேன்
அளவு பாடாததோ ரன்போ
டையா றடைகின்ற போது
இளமண நாகு தழுவி
யேறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதம்
கண்டறி யாதன கண்டேன்

என்பது அப்பர் அருள்வாக்கு.

நெஞ்சம் விந்தையானது. அலைகடலையும் நெஞ்சத்தையும் ஒப்பிடலாம். அலைகடலில் எண்ணத் தொலையாத அலைகள் உண்டு. அதுபோலவே, எண்ணத் தொலையாத ஆசை அலைகள் நெஞ்சில் உண்டு. அலைகள் எண்ணிக்கை பலவானாலும் அவை புதிய வண்ணமும் வடிவமும் உடையன அல்ல; முன் பின் என்ற காலமாறுபாடேயாகும். உருத்துதெழுந்து வந்த அலை, கரையில் மோதி அலையென்ற