பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வடிவமிழந்து - பெயரழிந்து ஆங்காரம் மங்கிக் கரையால் எதிர்த்துத் தாக்கப்பெற்று, உருக்குலைந்து, கரைந்து தண்ணீராகக் கடலில் கலக்கிறது. மீண்டும் அத் தண்ணீர்த் துளிகளே காற்றழுத்தத்தின் துணைக்கொண்டு அலையாகி மோதுகிறது. ஆக, வடிவத்திலும் மாறுதலில்லை; செயலிலும் மாறுதல் இல்லை. அதுபோலவே ஆசை அலைகள் நெஞ்சில் எழுகின்றன. ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தாலும் ஆசைகள் புதியன அல்ல. பழைய சுயநலமேதான். பழைய சுயநலம் மாறிப் புதிய பிறர் நலமாக இருப்பின் குணம் மாறும்; பயன் விளையும். ஒருகால் சுயநலமும் காப்பாற்றப் பெற்றாலும் பெறலாம்.

இந்த நெஞ்சு அறியாமைத் தன்மையுடையது. அதற்கு ஆய்ந்தறியும் அறிவுணர்வை விட வழக்கம்தான் பெரிது. அது இன்று புதுப்பாதை போடாது; நேற்று நடை பயின்ற பாதையிலேயே செல்லும்; அந்தப் பாதை நாற்றமுடையதாக இருந்தாலும் மூக்கைப் பிடித்துக் கொண்டாவது அந்தப் பழைய பாதையில் செல்ல வழி நடத்துமே தவிர, எளிதில் வழக்கத்தை மாற்றாது. நெஞ்சம், ஆசைகளின் ஊற்றுக்களன். ஆசைகள் துன்பந் தருவனவேயன்றி இன்பந்தரா, அதனாலன்றோ,

ஆசையறு மின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்

என்று, திருமந்திரம் பேசிற்று. 'ஆசையை விடுக' என்றால் ஒன்றும் வேண்டாம் என்பது பொருளல்ல. அன்பின் வழியல்லாமலும், பண்பு வழிப் பயன் கருதாமலும் விழைவது ஆசை. உணவு - உடல் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. உடலைப் பேணவும், பேணிப் பாதுகாக்கவும், திறனுறு வகையில் உடலைப் பயன்படுத்திக் கொள்ளவும் உணவை விரும்புதல் ஆசையாகாது. ஆனால், உணவின் மேலேயே ஆசை கொண்டு, சுவையில் நாட்டம் வைத்து, அச்சுவை