பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/326

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
322
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

பொருள் புதிதல்ல; உணர்வும் புதிதல்ல; எல்லாம் பழைய சுயநலத் தேவதையின் மயம். அஃது அரிப்புடைய சொறி சிரங்கைப் போல உயிர் வாழ்க்கையை அரித்து எரித்துக் கொண்டிருக்கிறது.

நேற்று, என்னை நான் நேசித்ததால் அடைந்தது துன்பமே. முந்தா நாளையக் கதையும் அதுவே. ஆயினும் “நான்”, “எனது” என்ற நச்சு உணர்வுகள் மாற்றப்பட்ட பாடில்லை. திரையில் காட்சி மாறினாலும் உணர்வு மாறாது போனால் பயனில்லை. நாட்கள் மாறினாலும், நாடிடும் நாட்டம் மாறினாலொழியப் பயனில்லை. நேற்றைய துன்பமே இன்று மீண்டும் வருகிறது. நேற்றைய 'நான்' இன்று 'நாம்' ஆக மாறி வளர்ந்தால், துன்பம் தொலையும். நேற்றைய என்னுடையது, இன்று 'நம்முடையது’ என்று மாறி, வளர்ந்தால் பயனுண்டு. 'நானில்' உலகமில்லை. ஆனால், நாம் என்பதில் 'நான்' என்பது, அவலம் தரத்தக்க ஆசையினின்று விலகி அன்பு வடிவம் பெற்று ஆங்கு இருக்கிறது. ஆளுக்கு அழிவில்லை. தீமைக்கே அழிவு. ‘என்னுடையது’ ‘நம்முடையது' ஆனபிறகு தனி ஒருவரின் உரிமை அழிந்து விடவில்லை; மாறாக உதவி பெற்றிருக்கிறது; ஆங்காரமற்றிருக்கின்றது. மேலும் சொன்னால், ஒருவரைப் பாதுகாக்கப் பலர் முன் வந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. ஒருவனாகத் தனித்து, வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அவலத்துடன் வாழ்க்கை முடிவு அடைவதைவிட, பலர் பாதுகாக்கும் வாழ்க்கையே புகழுடைய வாழ்க்கை. தாமே உண்பதைவிட, உண்பிக்க உண்பது சுவையுடையது. தாமே சிரித்து மகிழ்வதைவிட மற்றவர் மகிழ்விக்க மகிழ்வது மாண்புடையது. நாமே, நம்மை வியத்தலைவிட, மற்றவர்கள் வியந்து பாராட்டுதல் சிறப்புடையதாகும்.

ஆதலால், நேற்றைய நம் வாழ்க்கையில் விளைந்த துன்பத்தினைப் பார்த்து அதனின்றும் விலகி வாழ்தல் வேண்டும். அது போலவே நேற்றைய வாழ்க்கையிலேற்பட்ட