பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமய இலக்கியங்கள்

331


களுக்கு விளம்பரமும் நிறையச் செய்யப்படுகிறது. உள்ளூரில் வாழும் சராசரி மனிதரிடம் ஆர்வங்காட்டாதவர்கள், உலகு அவாவி நிற்கின்றனர். அவர்களின் அண்மையில் சென்றால் சாதித்திமிர், மற்ற மானிட சாதியை இழிவாக நினைக்கும் இழிநிலை, மொழிவெறி, காசு பறிக்கும் உத்திகள், வஞ்சனைகள், அம்மணமான புகழாசை முதலியன முடைநாற்றம் வீசுவதைக் காண்கிறோம். இவற்றைக் கூர்ந்து உணரும் மோப்ப ஆற்றல் இன்றைய மானிட சாதிக்கு மிகுதியும் இல்லை. அதனால் சங்ககால இலக்கியம் காட்டும் வாழ்க்கை முறை, பொறிகளில் தூய்மை காத்தலன்று; புலன்களில் தூய்மை காத்தலாகும். புலன்களில் தூய்மையுடையாருக்கே செந்தண்மை வரும். அதனால்தான்,

புலனழுக்கற்ற அந்தணாளன்

என்று புறநானூறு பேசுகிறது. இஃதொரு சமயக் கோட்பாடேயாம்.

அது மட்டுமா? தமிழர் தம் வழிபடு கடவுளாகிய பரசிவத்தின் வரலாறுகள் பலப்பல. அவை பழைய வரலாறுகளாகவும் உருப்பெற்றுள்ளன; இலக்கியச் சான்றுகளாகவும் இடம்பெற்றுள்ளன. நமக்கு வரலாறு இன்றியமையாததன்று; அந்த வரலாறு வடித்துத் தரும் பயனுடைய வாழ்க்கை நியதி இன்றியமையாதது. சாதாரணமாக உயிரினம் வாழத்தான் விரும்புகிறது. எளிதில் இறக்க யாரும் விரும்புவதில்லை. ஏமாற்றங்களால் ஏற்படும் மனக்குறையால் நிகழும் தற் கொலைகள் உணர்ச்சி வயப்பட்டவை. அவை கணக்கில் எடுத்துக்கொள்ளத்தக்கன அல்ல. எல்லாரும் நெடுநாள் வாழத் துடிக்கின்றனர். அதற்காக மருந்துகளைத் தேடி அலைகின்றனர். அதுமட்டுமா? தாம் வாழ்வதற்காக மற்றவர்களைப் பலி கொடுப்பதற்கும்கூடச் சிலர் ஆயத்தமாகின்றனர்.

இது மனித இயல்பாக இன்று இருக்கிறது. பரசிவத்தின் நிலை என்ன? அமரர்களைக் காப்பாற்ற அலைகடலில்