பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எழுந்த நஞ்சினை, தாம் உண்டது சிவம். அமரர்கள் சாவா மருந்தாகிய அமுதத்தை உண்டனர். ஆனால் சாவைத்தரும் நஞ்சினையுண்ட சிவம் வாழ்ந்தது. சாவா மருந்தை உண்ட அமரர்கள் செத்தனர்.

விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்'

என்பது சிலப்பதிகாரம். ஏன்? அமுதத்தால் மட்டுமா வாழ்ந்துவிட முடியும்? அமுதத்திலும் உயர்ந்த நல்லெண்ணம் வேண்டாமா? மற்றவர்கள் வாழவேண்டுமென்ற உணர்வே சிவம். யார் செத்தாலும் அக்கறை இல்லை; தாம் வாழ்ந்தால் போதுமென்ற அமரரின் எண்ணம் நஞ்சினும் கொடியது. ஆதலால், அமரர் தம் நெஞ்சத்திலூறிய நஞ்சை அமுதத்தாலும் மாற்ற முடியவில்லை. ஆதலால், செத்தொழிந்தனர். இக்கருத்தினை எவ்வளவு நயம்படப் புறநானூறு பேசுகிறது.

வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்
களம்படக் கடந்த கழல்கொடி தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே.

நெல்லிக்கனி, சாவா மருந்து. அதியமான் தான் வாழ விரும்பாமல் தமிழ் மூதாட்டியாகிய ஒளவையாரே வாழ வேண்டும் என்று எண்ணித் தருகின்றான். அதனால் பண் பாட்டுலகில் என்றும் அதியமான் வாழ்கின்றான். “நீல