பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/337

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சமய இலக்கியங்கள்
333
 


கண்டம்” தன்னல மறுப்பின் சின்னம்; அருளுடைமையின் அடையாளம்.

ஓர் இனத்தில் சமயம் தோன்றி வளர்வது அந்த இனம் நன்கு வளர்ந்த காலக்கட்டத்தில்தான்; தமிழ், சமயத்தில் சிறந்து விளங்கும் மொழி. கடவுள் நம்பிக்கை, மதம், சமயம் ஆகியன ஒரு தன்மையன போலத் தோன்றினாலும் மிகுதியும் வேறுபாடுடையன என்பது எண்ணத்தக்கது. தமிழர் சமய நெறிக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால், தமிழ்ச் சமய நெறியின் கடவுள் நம்பிக்கை மற்ற சமயங்கள் அல்லது மதங்கள் கடவுளைக் கருதுவது போலவன்று. தமிழ்ச் சமயத்தின் கடவுள் நம்பிக்கை, நம்பிக்கையின் பாற்பட்டது; நல்லெண்ணத்தின்பாற்பட்டது; ஆக்கத்தின் வழியிலானது; நீதியின்பாற்பட்டது.

மதம், மக்கள் மன்றத்தைத் தழுவாதது. சமயம், மக்கள் மன்றத்தைத் தழுவியதாக, மனித குலத்தை ஆக்குவதற்காகவே தோன்றியது. மதம், உருவாக்கப் பட்டது. சமயம் பரிணாம வளர்ச்சியில் உருவானது. மதத்திற்குப் பகுத்தறிவு பகையானது. சமயத்திற்குப் பகுத்தறிவு உடன்பாடானது. மதம், மறுமையைப் பற்றிப் பேசுவது. சமயம் இம்மையையும் பேசும்; மறுமையையும் பேசும், மதம் ஊழ்வினையின் வலிமையை மிகுத்துக் காட்டும். சமயம், ஆள்வினையை மிகுத்துக் காட்டும். மதம், சிற்றெல்லைகளைப் படைக்கும். சமயம், எல்லைகளைக் கடந்த பொதுமையைப் படைக்கும். இத்தகு சமயமே தமிழர் சமயம். இதனையே சேக்கிழார்,

செழுந்தமிழ் வழக்கு

என்கிறார். இந்தச் சமயநெறி “இந்து மதம்” என்ற கட்டமைப்பிற்குள் இல்லாதது. ஆனால் வரலாறு, நாட்டின் நடப்பில் பிணைப்பு ஏற்பட்டு இந்து மதப் பிணைப்பில் வந்த பிறகு அதன் கொள்கைகளும் இதன் கொள்கைகளாகக் கலப்பின் வழிவந்துள்ளன.