பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/339

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சமய இலக்கியங்கள்
335
 

என்பதறிக. அப்பரடிகள் இப்பொறிகளும் புலன்களும் உயிரின் நலத்திற்கு எதிராகப் போராடும் இயல்பினை விளக்குகின்றார். ஒர் உயிர், ஐம்புலன்களைத் துணையாகக் கொண்டு வளர்வது வாழ்வின் இயற்கை. ஆனால் இந்த ஐம்பொறிகள் உயிரோடு ஒத்துழைக்காமல் உயிருக்கு ஊறு செய்கின்றன என்று கூறுகின்றார்.

மெய்யுளே விளக்கை ஏற்றி
வேண்டள வுயரத் தூண்டி
உய்வதோர் உபாயம் பற்றி
உகக்கின்றேன் உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர்
அவர்களே வலியர் சாலச்
செய்வதொன் றறிய மாட்டேன்
திருப்புக லூர னிரே.

உயிரின் வலிமையைவிட ஐம்புலன்களின் வலிமை மிகுதி யாததற்குக் காரணம் புலன்கள் பொறிகளிடத்திலேயே இல்லை. உயிரிடத்தில் இயல்பாக இருக்கும் அறியாமை, இன்ப துன்பம் பற்றிய முடிவுகளில் நிலை பிறழச் செய்து உயிரை அலைமோத விடுகிறது. சமய தத்துவ உலகத்தில் அறியாமை என்பதற்கு, “ஒன்றும் தெரியாமை” என்பது பொருளன்று. ஒன்றைப் பிறிதொன்றாக முறைபிறழ அறிவதே அறியாமை.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்பது நினைக்கத்தக்கது. பிறழ அறிவதாகிய அறியாமையால் உயிர், நன்மையைத் தீமையென்றும் தீமையை நன்மையென்றும் தலைதடுமாற்றமாக அறிகிறது. இன்பத்தைத் துன்பமாகவும் துன்பத்தை இன்பமாகவும் எண்ணுகிறது. இங்ஙனம் உயிரின் மயக்கநிலையில் பழகிய புலன்கள் உயிர்