பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கண்டு உண்ணவேண்டும். அறிவுடைய வாழ்க்கை வாழ வேண்டும். செவிச் சுவை உணரார், வாய்ச்சுவை உணவு உண்பது வறிதே பயனற்றுப்போகிறது.

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்?

என்பார் திருவள்ளுவர்; செவியால் சுவைத்து வாழாத வாழ்க்கை அறியாமையின் காரணமாக அவலத்தில் ஆழ்ந்து அழியும்.

உயிரியல் வாழ்க்கைக்கு உடல் கருவியேயாகும். உடற் கருவியற்ற உயிரியல் வாழ்க்கை பயன்படுதலும் இல்லை; பயன் கொள்ளுதலும் இல்லை. உயிரின் வளத்தை மையமாகக் கொண்டே உடலியல் வாழ்க்கை அமைகிறது; உலகியல் வாழ்க்கை உருவாகிறது - உயிர் செழித்து வளரவும் உணவு தேவை. அது எந்த உணவு? உடல் வளர்ச்சிக்குரிய உணவு ஒருபொழுது உண்பதில்லை, அடிக்கடி உண்ண வேண்டும். பசியை முற்றாக மாற்ற உணவால் முடியாது. பசித்து உண்பவர்க்கு மீண்டும் பசி வரும் என்பர் மாதவச் சிவஞான முனிவர். ஆதலால் உடல் இயக்கத்திற்குப் பயன்படும் உணவு, சிற்றுணவு என்று கருதப்பெறும். இந்த உணவுக்குப் பசியை ஆற்றுகின்ற ஆற்றல் உண்டு. ஆனால் பசியை மாற்றுகின்ற ஆற்றலில்லை. செவி வழியாக உண்ணப்படும் உணவோ நல்லுணவு. அது நாட்டில் எளிதாகக் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் செவிச்சுவை முற்றாகக் கைகூடுவதில்லை. அது மேலும் மேலும் பசியை எழுப்புகிறது. செவியுணவு, உயிர் நிறைவைப் பெறத் துணை செய்யும். ஆனாலும், அதுவே நிறைவாகாது. வாயுணவும் செவியுணவும் உடல் வாயில்களான வாய் வழியாகவும் செவி வழியாகவும் உண்ணப்பெறுவன; உயிர், நிறைவை நோக்கி நடத்தும் பயணத்திற்குத் துணை செய்வன. ஆனால் உயிருக்கு நேரடியான உணவாகா இவை. உயிருக்கு