பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/340

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
336
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

தந்த பழக்க வாசனையில் நிலைத்து நின்றுவிடுகின்றன. உயிர், பட்டறிவில் நிலைதிருந்திய வழி உடல் புலன்களால் வழி திரும்ப முடிவதில்லை. அந்த நிலையில் ஒரு போராட்டம் நிகழ்கிறது. அப்போராட்டத்தில் புலன்கள் வென்று விடுவதாக அப்பரடிகள் கூறுகின்றார்.

உயிரின் அறியாமைக்கு மிகுதியும் காரணம் “செருக்கு” என்பது சமய நூற் கருத்து. உயிரின் அனைத்துத் தீமைகளுக்கும் அதுவே அடிப்படை. இதனை அப்பரடிகள்,

தினைத்தனையோர் பொறையிலா உயிர்போங் கூட்டைப்
பொருளென்று மிகவுன்னி மதியால் இந்த
அனைத்துலகும் ஆளலாம் என்று பேசும்
ஆங்காரம் தவிர்நெஞ்சே அமரர்க் காக
முனைத்துவரும் மதில்மூன்றும் பொன்ற அன்று
முடுகியவெஞ் சிலைவளைத்துச் செந்தீ மூழ்க
நினைத்தபெருங் கருணையன்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கால் உய்ய லாமே,

என்றுகூறி விளக்குகின்றார்.

சமய வாழ்க்கையின் பயன், பொறிகளும் புலன்களும் துாய்மையுடையனவாகி உயிர் அன்பில் தழைத்து வளர்வதேயாம். உயிரின்-தூய்மை என்பது பயன்படாத் துய்மையன்று; தீமை செய்யும் தூய்மையுமன்று. மாறாக, நன்றாற்றல் நிகழ்த்தும் தூய்மையே தூய்மை, அகத்திலும் புறத்திலும் ஒத்து இயல்வதே தூய்மை. இதனைச் சேக்கிழார்,

பூசு நீறுபோல் உள்ளும் புனிதர்கள்

என்று விளக்குவார். தூய்மையில் உவர்ப்பு இல்லை; உவப்பு உண்டு. தூய்மை அருள்நலஞ் சான்றது. அங்கு வேறுபாடுகளில்லை; காய்தல் இல்லை. அதுவே தூய்மை. பழுத்த மனத்து அடியார்களாக விளங்குவது சமய வாழ்க்கையின் பயன்.