பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/341

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சமய இலக்கியங்கள்
337
 

பொறை, சமய இயலின் ஒழுகலாறுகளில் சிறந்தது; விழுமியது. பொறையுடைமை வழி, மேலும் பல நல்ல ஒழுக்க இயல்புகள் வந்தமையும். பொறை-பொறுத்தாற்றல். நன்றும் தீதும் உலகியற்கை சுழன்று வருவன. அவை மானிட சாதியினாலேயே படைக்கப் பெற்று அனுபவிப்பன ஆகும். இதில் ஏன் மகிழ்ச்சி? மகிழ்ச்சியின்மை; பெரியோர், சிறியோர் என்பது அவரவர்தம் சூழ்நிலைக்கு ஏற்ப அமையும் ஒழுகலாறுகளில் விளங்கும் தன்மை. இதனால்-பெரியோரை வியந்து பாராட்டுதலைத் தவிர்க்க வேண்டும். ஒரே வழி-பெரியோரை வியந்து பாராட்டலும் சிறியோரை இகழ்தலும் கூடவே கூடாது. இஃது ஒரு ஒப்பற்ற சமுதாய நடைமுறை விதி.

தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே......
..............................
...................மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே,

என்பதறிக.

அருள்நலம் சான்ற வாழ்க்கையை விளக்கிக் காட்டுவன சமய இலக்கியங்கள். அருள்நலம் பழுத்த சமய வாழ்க்கையுடையார் எத்தகைய வேறுபாடுகளுக்கும் இடம் கொடார். சமய நெறியின் விழுமிய இலட்சியம் ஒருமைப் பாடேயாம். ஒருமைப்பாட்டு இயல்பை வளர்ப்பதில் உண்மையான சமயம் ஈடுபாடு காட்டுகிறது. மனித குலத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக இயங்குவது சமயமன்று. சமயச் சண்டைகள், சமயத்தின் இலக்கணத்திற்கு முரணானவை.

கு.இ.VII.22