பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/344

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
340
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

ஒருவர் வறுமைக்கு மற்றவர் முயன்று அதற்கு மாற்றுத் தேடுவதுதான் வாழ்க்கையின் சீலமாக அமைகிறது. இத்தகு சீலமுடைய ஒரு வாழ்க்கையை மிகப் பிற்காலத்தில்-இந்த இருபதாம் நூற்றாண்டில் “தருமகருத்தாக் கொள்கை” யென்று கூறினர். இக்கொள்கையை ஏழாம் நூற்றாண்டிலேயே அப்பரடிகள் தந்த திருமுறை இலக்கியம் எடுத்து மொழிந்தது.

இரப்பவர்க் கீய வைத்தார்
ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாம்
கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர்க் கங்கை தன்னைப்
படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார்
ஐயன்ஐ யாற னாரே,

என்பதறிக. வறுமையும் ஏழைமையும் நிறைந்த சமுதாய அமைப்பில் சமயநெறி கால்கொள்ளாது என்பது தமிழ்ச்சமய இலக்கியங்களின் முடிவு.

சமய வாழ்க்கை, உயிரின் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அறிகருவிகளை மையமாகக் கொண்டது. மனம், ஒன்றைப் பற்றுவது. மனம் பற்றிய ஒன்றின் தன்மையை ஆராய்ந்து நிர்ணயிப்பது புத்தி. அந்த ஒன்றை நோக்கி விரிவடைவது சிந்தனை, அதனை அடைதற்குரிய உறுதிப்பாட்டினை மேற்கொண்டு, முயற்சி செய்வது அகங்காரம். ஆக, மனம்தான் தோணிபோல் பயன்படுகிறது. இந்த மனம் குறைவிலா நிறைவு, கோதிலா அமுது, வரம்பிலா ஆற்றல், பேரறிவு என்று புகழப்பெறும் கடவுளைப் பற்றுவதன் மூலம் அத்தன்மைகளைத் தன்னிடத்து ஈர்த்துத் தன்னையும் தன்னைச் சார்ந்த இதர கருவிகளையும்