பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/345

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சமய இலக்கியங்கள்
341
 

தன்னையுடைய உயிரையும் வளர்த்துச் செழுமைப் படுத்துவதே வழிபாடு.

சமய வாழ்க்கையின் சீலம், உடற்சார்புடையது மட்டுமன்று. சமய நெறியில் உடற்சார்பான ஒழுகலாறுகள் - வாயில்கள் பாதுகாப்பு மட்டுமேயாம். அகம் நிறை ஒழுக்கங்களே சமய வாழ்க்கையின் பயன். உயிர், சமய வாழ்க்கையின் அனுபவமாகிய பத்திமையில் வளரும்பொழுது தொண்டார்வமும் முகிழ்க்கும்; பார்வாழப் பணிசெய்யும் ஆர்வம் தழைக்கும்.

பார்வாழத் திருவீதிப் பணிசெய்து
பணிந்தேத்திப் பரவிச் செல்வார்

என்று அப்பரடிகள் பற்றிச் சேக்கிழார் குறிப்பிடுவார். சமய உணர்வில் தோன்றும் பணியார்வம் இன்பத்தை விழையாது; துன்பத்திற்குத் துவளாது; புகழ்நாட்டம் கொள்ளாது. அஃறிணையைப்போல் தன்முனைப் பற்றுத் தன்னயப் பின்றிப் பணி செய்யும் வாழ்க்கையே சிறந்த சமய வாழ்க்கையென அப்பரடிகள் கூறுவார்.

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்அடி யேனையும் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே.

வையகம் தூய அன்பெனும் பத்திமையில் தழைத்துத் தொண்டு நெறியில் செழித்து வளர்வதே சமய இலக்கியங்களின் நோக்கம்-பயன்.