பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/347

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சமய இலக்கியங்களில் அறநெறி
343
 

துன்பம் என்றும் துன்பத்தை இன்பம் என்றும் முறை பிறழக் கருதுகிறது; நாடி முயல்கிறது.

ஒரு குடிசை; அந்தக் குடிசையில் வாழ்வோர் உயிரிரக்கவொழுக்கத்தில் வளராமையால் புலாலூண்பவர்கள். ஆமையைச் சமைத்து உண்பவர்கள்; அவர்கள் அந்தக் குடிசையின் அடுப்பில் உலைப் பானையை ஏற்றித் தீமூட்டி எரித்தனர். உயிருள்ள ஆமை ஒன்றை உலைப்பானை நீரில் அவிக்க இட்டனர். உலை நீரில் இளஞ்சூடு ஏறியபொழுது அந்த ஆமை கொள்ளை இன்பம் கண்டது. குளிர்நீரில் கிடந்து மரத்துப்போன ஆமைக்கு இதமான இளஞ்சூடு இன்பக் கிளர்ச்சியைத் தந்தது. பானையில் கிடந்த ஆமை அவ்வின்பக் கிளர்ச்சியில் திளைத்து மகிழ்ந்து விளையாடியது. ஐயோ, பாவம்! நீர் இளஞ்சூட்டில் இருக்கும் பொழுது மகிழ்வைத் தருகிறது; அடுப்பில் நெருப்பு எரிதலால் நீரின் கொதிநிலை மாறும்; சுடு நீராகும்; ஆமை அழியும். இப்படி எண்ணிப் பார்க்க ஆமைக்கு மனம் இல்லை. ஏன்? ஆமையின் அறிவு சூழ்நிலைகளுக்கு இசைந்ததே கட்டுப்பட்டதே. சூழ்நிலைகளை மாற்றியமைத்துக் கொள்ளும் அளவுக்கு விலங்குகளின் அறிவுத்திறன் வளரவில்லை; அமையவில்லை.

........உலையை ஏற்றித்
தழல்எரி மடுத்த நீரில்
திளைத்துநின் (று) ஆடுகின்ற
ஆமைபோல் தெளிவி லாதேன்

என்றார் அப்பரடிகள்.

இந்த வாழ்க்கையை மனித வாழ்க்கையோடு பொருத்திப் பாருங்கள். வாழ்க்கையென்பது அடுப்பு; அனுபவம் என்பது பானை, ஆசையென்பது தீ; ஆமை என்பது உயிர்; அவ்வப்பொழுது பெறும் சிறுபொழுதின்பம் இளஞ்சூடு, சிறு பொழுதின்பங்கள் அனைத்தும் சிறுமை பொருந்தியவழி வருவனவேயாகும். சிறுமை பொருந்திய