பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

344

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இன்பங்கள் அன்பைக் கெடுக்கும்; உறவைப் பிரிக்கும்; பகையை வளர்க்கும். தெளிவற்ற மனமுடையோர் இந்நெறி நின்று அலமருவர். தெளிவுடையார் சிறுபொழுதின்பத்தை விரும்பார்; நிலையான இன்பத்தையே விரும்புவர். நிலையான இன்பம் என்பது கால எல்லையைக் குறிப்பதன்று. எங்கும் எல்லோருக்கும் இன்பமாக இருப்பதுதான் உண்மையான இன்பம்; அறநெறியின் பாற்பட்ட இன்பம். ஆதலால் சிந்தையில் தெளிவு தேவை. சிந்தையில் தெளிவுடையாராலேயே அறநெறியில் நிற்றற்கு இயலும். இதனை அப்பரடிகள்,

சிந்தையுள் தெளிவு மாகித்
தெளிவினுட் சிவமு மாகி

என்றார்.

தெளிந்த அன்புடையார் அன்பு நெறியில் நின்று வாழ்வர். அன்பில் விளைவதே அறநெறி. அன்பும் அறமும் பிரிக்க இயலாத இரட்டைப் பண்புகள்; ஒன்றையொன்று தழுவி நிற்பன. அன்பு மனித குலத்தின் கற்பு. அன்புதான் சிவம்; சிவம்தான் அன்பு! அன்பு ஆற்றல் மிக்குடையது. “ஆற்றல் மிக்க அன்பு” என்று அப்பரடிகள் பாராட்டியுள்ளார். அன்பில் தோய்ந்த மனம் அறநெறியில் நிற்கும். கடவுளை நம்பிச் செய்கின்ற சடங்குகள், கடவுளுக்காக செய்யப்பெறுவன அல்ல. அன்பினைத் தோற்றுவித்து வளர்க்கச் சடங்குகள் பயன்படும். சமயச்சடங்குகளுள் சிறப்பான சடங்காகக் கருதப் பெறுவது வற்றாத நீர்ப் பெருக்குடைய நீர்நிலைகளில் குளிர்ப்பது; தீர்த்தம் ஆடுவது; கங்கைக்குச் சென்று குளித்தல்; குமரிக்கடல் துறைக்குச் சென்று குளித்தல்.

இந்நீர்நிலைகளிற் சென்று குளிப்பது மிகுந்த பயனைத் தரத்தக்கது. எப்படி? அங்குச் சென்று குளித்தலால் மட்டுமே பயன் விளையாது. கங்கை, காவிரி போன்ற ஆறுகளை நாடிச் செல்லும்பொழுது அந்தப் பயணத்தில் பல்வேறு மனிதர்-