பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உயிருக்குரிய உணவு!
31
 

உணவு திருவருளே. உயிருக்கு உற்ற குறையை நீக்க, நிறைநலம் வழங்கத் திருவருளாகிய உணவாலேயே இயலும். குறைவிலா நிறைவாழ்வான நல்வாழ்க்கையை-துன்பத் தொடர்பில்லாத நிறை இன்ப வாழ்க்கையை நேரடியாக வழங்கும் ஆற்றல் வாயுணவுக்கும் செவியுணவுக்கும் இல்லை. ஆயினும், இவை இரண்டும் இன்றி உயிர் நிறை நலம் பெறமுடியாது. இவையிரண்டின் துணையுடன் உலாவரும்போதே உயிர் தனக்குரிய உணவை உண்ண முயலவேண்டும்.

உயிர்களுக்குரிய உணவு எது? இறைவன் திருவருளை நினைந்து தமிழ் செய்தலே உயிருண்ணுதற்குரிய உணவாகும். இறைவனை நினைத்தலின்மூலம் உண்ணும் உணவு, நிறைஉயிர் உண்ணத்தக்க உணவாகும். இந்த உணவு குறைந்தால் துன்பம் வந்துவிடாது; மிகுதியானாலும் துன்பம் வராது. இறையை - இறைவன் திருவருளை உன்னி உன்னி எண்ணுதலை உணவு என்றே திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். உடலுக்கிடும் உணவை உடல் ஏற்று, முறையாகச் செரித்து உணவின் பயன்கொள்ளும்பொழுது, உடல் பிணியினின்றும் விடுதலை பெறுகிறது; பயன் கொள்கிறது. உயிர் இறைவன் திருவருளை நினைந்து தவம் செய்தலின் மூலம் அத் திருவருளின் தன்மைகளைத் தனக்கு உரிமையாக்கிக்கொள்ளும்பொழுது, பிறவிப்பிணியிலிருந்து விடுதலை பெறுகிறது; வாழ்க்கையின் பயனைக் கொள்கிறது.

உயிர் உண்ணும் உணவெனத் தக்கது இறைவன் திருவருள் என்றால், அந்த உயிர் திருவருளில் ஒன்றித் திளைத்து உறுபயன் கொள்ளவேண்டும் என்பது தெளிவாகிறது. மேலும், உணவினால் உடலே பயன்பெறுகிறது; உணவிற்குப் பயனில்லை. உணவிற்காக யாரும் உண்பதில்லை. அதுபோலத் திருவருளால் உயிரே வளம் பெறுகிறது; உயிருக்கே ஆக்கம். உயிருக்கு உண்ணப்படும் திருவருள் நிறைவைத் தரவல்லது. உயிருக்கு நிறைவைத் தரத்தக்க