அவருடைய சொந்தப் பொருளிலேயே மருந்துகளை வாங்கி வைத்தார். மருந்துகள் அவருக்குச் சொந்தமானவையே. அவர் உரிமை கருதி அந்த மருந்துகளையெல்லாம் தாமே உண்பாரா? பிணியுடையாரின் பிணியை நீக்கத்தானே அந்த மருந்துகள் பயன்படவேண்டும். அங்ஙனமின்றி, உரிமை கருதி அவரே அந்த மருந்துகளை உண்பாரானால் அவர் மரணமடைவார். வறுமைக்குப் “பிணி" என்றும், செல்வத்திற்கு “மருந்து” என்றும் பெயருண்டு. வறுமையுடையார் “பிணி” யுடையார், செல்வமுடையார் “மருந்து"டையார் செல்வமுடையார் செல்வத்தைத் துய்த்தற்கு இயலாது; வறுமையுடையாரே துய்த்தற்கு இயலும். அதனாலன்றோ புற நானூறும்,
- செல்வத்துப் பயனே ஈதல்;
- துய்ப்பேம் எனினே தப்புந பலவே
என்று பாடிற்று. இக்கருத்தினை அப்பரடிகள்,
- இரப்பவர்க்(கு) ஈய வைத்தார்;
- ஈபவர்க்(கு) அருளும் வைத்தார்
என்று அருளிச் செய்தார். ஆதலால், கடின உழைப்பால் செல்வத்தை ஈட்டுதலும், ஈட்டிய பொருளைப் பசிப்பிணியால் வருந்துவோர்க்கு வழங்கி வாழ்வித்தலும் உயர்ந்த அறநெறிகளாகும்.
இங்ஙனம் வருந்துவோர்க்கு உதவி செய்து வாழ்வளிப்பதில் வேறுபாடுகள் காட்டுவது கூடாது. உயிர்க்குலம் ஒன்றேயாம். நாடு மொழி ஆகிய வேறுபாடுகள் இயற்கையாக அமைந்தவை. அவை பொருட்படுத்தத்தக்கன அல்ல. சமய வேறுபாடுகள் சிந்தனை வளர்ச்சியாலும் தத்துவ வளர்ச்சியாலும் உருவானவை. இவையும் பொருட்படுத்தத்தக்கன அல்ல. குல வேறுபாடுகளோ பண்புவழி அமைந்தன. ஆனால், அவை மாறுபாடுகளுக்கும் பிரிவினைக்கும் உரியன அல்ல. சாதி வேறுபாடுகள் செயற்கை முறையில் தன்னல