பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/352

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
348
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

நாட்டத்துடன் கற்பிக்கப் பெற்றவை. ஆகவே, சாதி வேற்றுமை தீது; சாபக்கேடு. எந்தக் காரணத்தாலும் உயிர்க் குலத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக நினைப்பதும் பேசுவதும் ஒழுகுவதும் தீமைகளாகும். எவ்வளவு பெரியவராகத் தெரிந்தாலும் சாதி வேற்றுமைகளை மேற்கொண்டொழுகுபவராயின் அவர் தீயோரே!

சமயங்கள் மனித உலகத்தைச் செழுமைப்படுத்தத் தோன்றியவையே. ஆனால், சமயங்களை மையமாகக் கொண்டே மாறுபாடுகளும் முரண்பாடுகளும் பகையும் வளர்க்கப்படுமாயின், சமயங்கள் பயன் தரா. இதனை அருளால் உணர்ந்த வள்ளற் பெருமான், சமயங்களைக் கடந்த பொதுநெறிக்கு மக்களை அழைத்துச் சென்றார். அந்நெறிதான் சன்மார்க்க நெறி. அப்பரடிகள் “எல்லா உலகமும் ஆனாய் நீயே” என்றார். இது மனித உலக ஒருமைப்பாட்டின் குரலுமாகும். அப்பரடிகள், பிறப்பினால் சாதி வேற்றுமை பாராட்டும் பொய்ச் சாத்திர நெறியைக் கடுமையாகச் சாடியுள்ளார். சாத்திரங்களைக் காட்டி, ஊழ்வினையைக் காட்டி, உணவுப் பங்கீட்டு அட்டை (Ration Card)யை உவமையாகக் காட்டிப் பிறப்பில் ஏற்றத் தாழ்வாக அமைந்துள்ள இன்றையச் சமுதாயக் கொடுமைகளைக் கட்டிக் காப்பாற்ற அன்றும் பலர் முயன்றனர். இன்றும் சிலர் முயன்று வருகின்றனர். அவர்கள் “ஆதாரமில்லாமலா பேசுகின்றனர்? ஒரு வகுப்பினர் ஆவுரித்துத் தின்று உழல்கின்றனராம்; அவர் புலையராம்; அதனால், தீண்டத்தகாதவராம்.” இங்ஙனம் கூறுபவர்கள் என்ன செய்கிறார்கள்? இவர்கள் மனித இரத்தத்தையன்றோ உறிஞ்சிக் குடிக்கின்றனர்? நாட்டின் நல்லூழின்மையால் ஏற்பட்ட விபத்துக்களால், இவர்கள் உயர்ந்த இடத்தில் ஒதுக்கப்பட்டு விட்டனர். இருக்கும் இடம் உயர்ந்தது என்பதாலேயே உபதேசமும் உயர்ந்ததாகிவிடுமோ? அப்படியானால், ஆவுரித்துத் தின்று உழல்வது தவறா? இல்லையா? தவறு