பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

354

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




வளத்தின்மலிந் தேழுலகும்
வணங்குபெருத் திருவாருர்க்
குளத்திலெடுத் தார்வினையின்
குழிவாய்நின் றெனையெடுத்தார்

(ஐயடிகள் காடவர்கோன் புராணம்.9)

என்பது அந்தப் பாடல்.

இங்ஙனம் பலராலும் போற்றப் பெற்றவர் நம்பியாரூரர். சமுதாயத்துறையிலும் சமயத்துறையிலும் நம்பியாரூரர் புதிய திருப்பு மையங்களைக் கண்டு தமிழக வரலாற்றுக்கு உந்து சக்தியாக விளங்கினார்.

தமிழ் நெறியை, தமிழிசையை, தமிழ்ப் பண்பாட்டை, தமிழக அகத்திணை வாழ்க்கையைப் புதுக்கி உயிர்ப் பளித்ததால் தமிழர்க்கு நம்பியாரூரர் குலதெய்வமே! அவர் தம் அடிமலர்கள் போற்றி! போற்றி!

வாழ்ந்த காலம்

நம்பியாரூரர் வாழ்ந்த காலம் துல்லியமாகக் கணக்கிடப்படவில்லை. ஆனாலும் சுந்தரர் வரலாற்றில் அகச் சான்றுகளுக்கிணங்க கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியும் எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியுமாக இருக்க வேண்டும் என்று கொள்ளலாம்.

திருத்தொண்டத் தொகையில் இடம் பெற்றுள்ள “கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமாள் காடவர் கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்” என்று போற்றப் பெற்ற பல்லவர் குலத்தோன்றல் நம்பியாரூரர் காலத்தில் வாழ்ந்தவன்.

பல்லவ அரசன் கழற்சிங்கன் சிறந்த சிவபக்தன். இந்தக் காடவர் கோமனாகிய கழற்சிங்கன்தான் பூசலார் நாயனார் வரலாற்றில் பேசப்பெறும் பல்லவ அரசன்.