பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/360

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
356
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

இப்புவியிலேயே இறைநிலை எய்தலாம் என்பதனை உணர்த்துவது நம்பியாரூரர் வரலாறு.

நம்பியாரூரர் வரலாறு விறுவிறுப்பானது; சுவையானது அனுபவங்கள் மிகுதியும் உடையது. அது தமிழக வரலாறாக இயங்கியிருக்கிறது; தமிழ்த் தத்துவ வரலாறாக, தத்துவங்களின் விளக்க வரலாறாக இயங்கியிருக்கிறது. இவர் வரலாறு ஒண்மை யுடையது!

சாதிகளின் சங்கமம்

நம்பியாரூரர் திருமுனைப்பாடி நாட்டில், திருநாவலூரில் ஆதிசைவ மரபில் திருவவதாரம் செய்கின்றார். பெற்றோர் சடையனார்-இசைஞானியார். நம்பியாரூரர் சிறு தேர் உருட்டி விளையாடும் பருவத்தில் நரசிங்க முனையரையர் என்ற அரசர் அவரை எடுத்துப் போய் முறையாக வளர்க்கிறார். நம்பியாரூரர் முறையாக வளர்கிறார்.

இவர் வரலாற்றில் சாதிகள் சங்கமம் ஆகின்றன. நம்பியாரூரர் பிறப்பால் ஆதிசைவ மரபினர்; தமிழ்க் குடியினர்தான்; பார்ப்பனர் அல்லர். இதனை ஆட் கொண்டருள வந்த வழக்காடி அந்தணரிடத்தில் நம்பியாரூரர் கூறுவதால் அறியலாம்.

அனைத்துநூ லுணர்ந்தீர் ஆதி
சைவன்என் றறிவீர் என்னைத்
தனக்குவே றடிமை என்றிவ்
வந்தணன் சாதித் தானேல்,
மனத்தினால் உணர்தற் கெட்டா
மாயையென் சொல்லு கேன்யான்
எனக்கிது தெளிய வொண்ணாது
என்றனன் எண்ண மிக்கான்

(தடுத்தாட்கொண்ட புராணம் 54)

என்பதறிக.