பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/365

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுந்தரர்
361
 


திருவெண்ணெய் நல்லூர்த் திருவருள்துறைத் திருக்கோயிலினுட் புகுந்து மறைந்தார்.

உடனே விசும்பில் இறைவன் அம்மையப்பனாகக் காட்சி தந்தருளி, கயிலையில் கொடுத்த வாக்குறுதியால் தடுத்தாட்கொண்டதாக அருளினார்.

நம்பியாரூரர், இறைவன் கருணையை நினைத்து நெஞ்சுருகி நெகிழ்ந்து போனார். இறைவன் நம்பியாரூரருக்கு “வன்தொண்டன்” என்று பெயரிட்டார். இந்த வரலாற்றுக்கு சுந்தரர் தேவாரத்தில் அகச் சான்றுகள் உண்டு.

அன்று வந்தெனை அகலிடத் தவர்முன்
ஆளதாக என்று ஆவணங் காட்டி
நின்று வெண்ணெய்நல் லூர்மிசை ஒளிந்த
நித்தலத் திரள் தொத்தினை

(7.62.5)

என்று சுந்தரர் பாடுகின்றார். மேலும்,

தன்மையினால் அடியேனைத்
தாம் ஆட்கொண்ட நாள் சபைமுன்
வன்மைகள் பேசிட வன்றொண்டன்
என்பதோர் வாழ்வு தந்தார்

(7.17.2)

என்றும் குறிப்பிட்டுக் கூறுவது அறிக. வழக்கின்போது ‘பித்தன்’ என்றதால் “பித்தா! என்றே பாடுக” என்றான் இறைவன்.

திருப்புமையம்

இந்த வரலாற்றுப் போக்கில் சில ஐயங்கள் எழுவது இயற்கை. முதலாவது ஐயம், “நம்பியாரூரருக்குத் திருமணம் நிச்சயிப்பதற்கு முன்பே, அதாவது பேசி முடிக்கும்பொழுதே இறைவன் திருமணத்தைத் தடுத்து இருக்கக் கூடாதா? ஏன் திருமண நாள்-நாழிகை வரை காத்திருந்து தடுக்க வேண்டும்?” என்பது.