பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தரர்

363


வருகின்றனர். இந்தப் பழக்கமும் மனு ஸ்மிருதியின் தாக்கம் தானா? இவையெல்லாம் ஆய்வுக்குரியன.

தோழமையாகத் தன்னைத் தந்தனன்

திருவெண்ணெய் நல்லூரில் சிவபெருமான் நம்பியாரூரரின் திருமணத்தைத் தடுத்து ஆட்கொண்டருளினன். நம்பியாரூரர் திருப்பதிகங்கள் பாடத் தொடங்கினார். திருத்தலப் பயணமும் செய்யத் தொடங்கினார்.

வரலாற்றை விரித்துக் கூறவேண்டிய அவசியமில்லை. சித்தவட மடத்தில் திருவடி தீட்சையும் பெற்றுக் கொண்டார். தில்லைக்கூத்தன் நம்பியாரூரைத் திருவாரூருக்கு ஆற்றுப் படுத்தினார். திருவாரூருக்கு எழுந்தருளிய நம்பியாரூரர்,

ஆரு ரவர் எம்மையும் ஆள்வரே கேளிர்

என்று வினவுகின்றார். திருவாரூர் நாயகன், “நம்பியாரூரனே! தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்” என்று கூறி ஆட்கொண்டருளினன். ஆட்கொண்டருளியதுடன் “என்றும் திருமணக் கோலத்துடன் வாழ்க!” என்று வாழ்த்தியும் அருளினன். திருவாரூர், நம்பியாரூரரைத் “தம்பிரான் தோழர்" என்று ஆக்கியது; அழைத்தது. தம்பிரான் தோழரும் “என்றன்னை ஆள் தோழனே!” என்று விதந்து சிவபெரு மானை வாழ்த்துகின்றார்.

பரவையார் திருமணம்

திருவாரூர்த் திருக்கோயிலில் நம்பியாரூரர் பரவையாரைச் சந்திக்கின்றார். பரவையார் தம்பிரான் தோழர் காதல் முகிழ்க்கிறது. இது, பண்டு தோன்றிய காதலின் தொடர்ச்சி என்று கூறவும் வேண்டுமோ? திருவாரூர் இறைவனும், தம்பிரான் தோழருக்கும்-நங்கை பரவையாருக்கும் இனிதே திருமணத்தை முடித்து வைக்கிறார்.