பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/369

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுந்தரர்
365
 

என்றும் சேக்கிழார் அருளியுள்ள பான்மையை உணர்க. இத்தகு காதல் மரபு இன்று என்னாயிற்று? தரங்கெட்டுப் போயிற்று!

தம்பிரான் தோழர், திருவாரூர் ஈசன், பரவையாரைத் தந்தருளியதை,

ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோனுழமாய் யான்செய்யும் துரிசுகளுக்கு உடனாகி
மாழைஒண்கண் பரவையைத்தந் தாண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆருர் இறைவனையே,

(7.51–10)

என்று உள்ளம் கனிந்தும் கசிந்தும் பாடியுள்ளமை இந்த வரலாற்றை உறுதிப்படுத்துகிறது.

அடியார்க்கும் அடியார்

இந்தச் சூழ்நிலையில்தான் தென்தமிழ் மொழியின் பயன் என்று பாராட்டப்பெறும் திருத்தொண்டத் தொகையைத் தம்பிரான் தோழர் அருளிச் செய்துள்ளார். ஆதிசைவ குடும்பத்தில் பிறந்து அரச குடும்பத்தில் வளர்ந்து வன்மை பேசி வன்தொண்டராக விளங்கிய தம்பிரான் தோழர் “அடியார்க்கும் அடியேன்” என்று எத்தனை தடவை தான் சொல்வது? புதுமாதிரியான, ஆக்கவழியிலான தண்டனை இது.

திருவாரூர் இறைவன் “தில்லை வாழந்தணர்” என்று அடியெடுத்துக் கொடுக்கத் திருத்தொண்டத் தொகையைத் தம்பிரான் தோழர் அருளிச் செய்கின்றனர். இந்தத் திருத் தொண்டத் தொகையின் விரிவாக்கமே பெரியபுராணம் என்று போற்றப்பெறும் திருத்தொண்டர் புராணம்.