பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/373

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுந்தரர்
369
 

மரத்தடியில் சபதம் பெற்றுக்கொள்” என்றும் அறிவுறுத்துகின்றான். எம்பெருமான் திருவிளையாட்டு என்னே!

வைகறைப் பொழுது! சங்கிலியார் தோழிகளுடன் திருக்கோயிலுக்கு வருகிறார். நம்பியாரூரர் சங்கிலியாரை அணுகி, பெருமான் அருளியதைக் கூறிச் சபதம் செய்து தரவும், திருமணம் செய்து கொள்ளவும் இறைவன் எழுந்தருளியுள்ள கருவறையின் திருமுன்புக்குச் சங்கிலியாரை அழைத்தார்.

சங்கிலியாரின் பாங்கிகள் “இதற்காக இறைவனின் கருவறைக்குச் செல்லவேண்டுமா? அவசியமில்லை. இந்த மகிழமரத்து அடியிலேயே சபதம் செய்தால் போதும்” என்கின்றனர்.

நம்பியாரூரர் மனமருட்சி அடைகிறார். ஆயினும் திருமண வேட்கை வெற்றி பெறுகிறது. நம்பியாரூரர் மகிழின் கீழ்ச் சங்கிலியாருக்கு “நின்னைப் பிரியேன்” என்று சபதம் செய்து கொடுக்கிறார். திருமணமும் நடக்கிறது.

இத் திருமணத்தில் திரு ஒற்றியூர் இறைவன் அறச்சங்கடத்திற்கு ஆளானார். தம்பிரான் தோழர் விருப்பத்தையும் புறக்கணிக்க முடியவில்லை. சங்கிலியார் நலனையும் புறக்கணிக்கத் திருவுள்ளம் இல்லை. முதற் கட்டத்தில் சதுரப்பாட்டுடன் நடந்து கொண்டு விட்டான் இறைவன். இந்த நிகழ்வுகள் பற்றித் தம்பிரான் தோழர் நமது தேவாரத்தில்,

பொன்னவிலும் கொன்றையினாய் போய்மகிழ்க்கீழ்
இருவென்று
சொன்னஎனைக் காணாமே சூளுறவு மகிழ்க்கீழே
என்னவல்ல பெருமானே இங்கிருந்தாயோ என்ன
ஒன்னலரைக் கண்டாற்போல் 'உளோம் போகீர்’
என்றானே,

(7.89.9)

என்று பாடுவதை அறிந்து மகிழ்க.

கு.இ.VII.24