பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/377

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுந்தரர்
373
 


கால காலனைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே,

(7.61.1)

என்று பாடி விளக்குகிறார். மீண்டும் பலபதிகளைக் கண்டு வணங்கிக் கொண்டு-திருவாவடுதுறைக்கு வந்து சேர்கிறார். இந்நிலையில் உடலில் நோய் வேறு வந்து விட்டது. இதனை,

கண்ணி லேன்உடம் பில்அடு நோயால்
கருத் தழிந்து உனக்கே பொறை யானேன்,

(7.70.2)

 
என்று பாடி வருந்துகின்றார். அடுத்து, திருத்துருத்திக்குச் செல்கின்றார். திருத்துருத்தி இறைவனின் ஆணைப்படி திருக் கோயில் திருக்குளத்தில் நீராடி நோய் நீங்கப் பெறுகிறார். இதனை,

மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி
வெடிபடக் கரையொடும் திரைகொணர்ந்து எற்றும்
அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார்
அடியிணை தொழுதெழும் அன்பாராம் அடியார்
சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன். நாயேன்
என்னைநான் மறக்குமாறு எம்பெரு மானை
என்னுடம்பு அடும்பிணி இடர் கெடுத்தானை,

(7.74.1)
என்ற பாடல் புலப்படுத்துகிறது.

சொன்னவாறறிவார் திருவருளால் உடல் நோய் நீங்கப்பெற்றுப் பல தலங்களையும் வழிபட்டுக் கொண்டு திருவாரூரை வந்தடைந்தார். திருவாரூர் பரவையுண் மண்டளியை வாழ்த்தி வணங்கிப் பின்பு இராக்கால வழி பாட்டிற்குத் திருவாரூர்த் திருமூலட்டானேசுவரர் திருக் கோயிலுக்குச் செல்லுகிறார். இந்த நிலையில் திருவாரூர்ப் பெருமானோடு தான் அயலாய்ப் போனது போல எண்ணி வருந்திப் பாடுகின்றனர்.