பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

374

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


 அதன்பின் புற்றிடங்கொண்ட ஈசன் திருமுன் நிலந்தோய வீழ்ந்து வணங்கிப் பிறிதொரு கண்ணையும் தந்தருளும்படி வேண்டுகிறார். இந்தப் பதிகம் மிக மிக அற்புதமானது; உருக்கமானது. பாடலில் அடிமைத் திறமும் இருக்கிறது. மேவிப் பழி சுமத்தும் பாங்கும் இருக்கிறது.

மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவாருரீர் வாழ்ந்து போதீரே.

(7.95.1)

விற்றுக் கொள்வீர் ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றும் செய்ததில்லை கொத்தை ஆக்கினீர்
எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர்? நீரே பழிப்பட்டீர்!
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே

(7.95.2)

என்று பாடுகிறார். திருவாரூர் பெருமான் இரங்கியருளி வலக் கண்ணையும் தந்தருளுகின்றார். தம்பிரான் தோழர் ஆவல் தீர இரு கண்களாலும் ஆரூரானைத் தொழுதேத்திப் போற்றினார்; ஆடினார்; பாடினார்; மகிழ்ந்தார்.

பரவையார்பால் பெருமான் தூது

சங்கிலியார் திருமணச்செய்தியை அறிந்த பரவையார் சுந்தரருடன் புலவிகொண்டார். இதையறிந்த சுந்தரர் சான்றோர் சிலரைத் துதனுப்பினார். பரவையார் உடன்பட வில்லை. மாறாகப் பரவையார் தாம் உயிர் துறப்பது உறுதி என்று கூறினார்.

தூது சென்றவர்கள் திரும்பி வந்து நடந்ததெல்லாம் நம்பியாரூரரிடம் கூற, அவருக்குக் கவலை மேலிட்டது;