பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
34
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 இந்த உலகியலில் எங்கும் எதிலும் சுவையூற்றுக்கள் மலிந்துள்ளன. அச் சுவையினை மோப்பம் பிடித்துச் செல்லும் இயல்பின புலன்கள். புலன்கள் தாம் மட்டும் செல்வனவல்ல; தம்மையுடைய தலைவனையும் இழுத்துச் செல்லும் தகையன. அங்ஙனம் புலன்கள் இழுக்கும் பொழுது, இழுப்புழிச் செல்லாமல், செல்லும் நெறி தேர்ந்து அவ்வழியில் மட்டும் புலன்களைச் செலுத்தித் தாமும் செல்ல வேண்டியது மனித வாழ்க்கையின் கடமை. வேளாண்மைக்குக் களை, பகை, நல்ல பத்திமை வாழ்க்கைக்கு உயிர்ப் பகையாகிய காமம் முதலிய அறுவகைப் பகைகளையும் வெற்றி பெறுதல் வேண்டும். அடுத்து, மாறாத இன்ப அன்பை அடையத் தடையாக இருப்பவை குணங்களேயாம். அரச குணம் என்று சொல்லக்கூடிய உயர்ந்த குணம், அறிவு விருப்பமுடையது; ஆள்வினை யாற்றல் உடையது; விரைந்து தொழிற்படும் இயல்பினது. ஆயினும் இக் குணம், உலகியல் இன்பத்திற்கு ஏற்புடையதானாலும் நிறை இன்பத்திற்குத்தடையே. விண்ணின்றிழியும் துளிகள் பலப்பலவாகச் சிதறும் பொழுது உரிய பயனை அவை தருவதில்லை. அந்த நீர்த்துளிகள் ஒரு காலாக, ஓர் ஆறாக, ஓர் ஏரியாக உருமாறும் பொழுதே உண்மையில் அவை உலகுக்குப் பயன்படுகின்றன. அதுபோலவே, சிந்திக்கும் திறனுடைய சித்தம், சிந்தனையை ஒரு நெறியின்பாற் படுத்திக் கொள்ளத் தவறினால் சிந்தனைத் திறன் பயனற்றுப் போகிறது. அதனாலன்றோ, “ஒரு நெறிய மனம் வைத்து உயர்ஞான சம்பந்தன்” என்றார் ஆளுடைப் பிள்ளையார். “ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனம் இல்லை” என்றார் அப்பரடிகள். “ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்” என்றார் வள்ளலார். ஆதலால், நுண்ணுடலின் செயலுறுப்புக்களாகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு கருவிகளையும் ஒருநெறிப்படுத்தவேண்டும். இவையனைத்தும் செய்தாலும் இதயத்தின் ஆழத்தில் பேய்ச்சுரையை