பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

382

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


 “இரண்டும் உடன் நிகழ்வது ஏன்?” என்று வினா எழுப்பி, அழுகுரல் கேட்ட வீட்டுக்குச் செல்கிறார். அருமந்தப் புதல்வனை முதலை வாய்ப் பறிகொடுத்த தாயின் அழுகை அது. உடனே சிவபெருமானை வேண்டி முதலையுண்ட பாலகனை மீண்டுத் தந்து தாய்க்கு மகிழ்வூட்டுகின்றார்.

கயிலைப் பயணம்

சேர நன்னாடு அடைந்து சேரமான் பெருமாளுடன் மகிழ்ந்துறைகின்றபோது திருவஞ்சைக் களத்தில் எழுந்தருளியுள்ள இறைவனைக் காதல் மீக்கூர வணங்கித் “தலைக்குத் தலைமாலை” எனும் பதிகம் பாடி அருள்கின்றார். இப்பதிகம் முழுவதிலும் திருவடிசாரும் வேட்கையைப் புலப்படுத்தினார்.

கயிலாயத்துறையும் இறைவன் வெள்ளை யானையை அனுப்பித் தம்பிரான் தோழரை அழைத்து வரும்படி தேவர்களை அனுப்பினான். சேரமான் தோழர் சேரமான் பெருமாளைச் சிந்தித்துக் கொண்டே வெள்ளை யானையின் மீது அமர்ந்து கயிலைக்குப் பயணமானார்.

இதனை அறிந்த சேரமான் பெருமாள் தனது குதிரையின் செவியில் திருவைந்தெழுத்தை ஓதி அவரும் பயணமானார். சுந்தரர் இவர்ந்து சென்ற வெள்ளை யானைக்கு முன்பாகக் குதிரை செல்கிறது.

தம்பிரான் தோழர் கயிலைநாதனை அணுகி வணங்கி நின்று சேரமான் பெருமாள் வந்திருப்பதை விண்ணப்பித்தார். சேரமான் பெருமாளும் அழைக்கப்பெற்றார்.

சேரமான் பெருமாள் உள்ளே சென்று வீழ்ந்து வணங்கித் “திருவுலாப் பாடினேன்; திருச்செவி சாத்தியருளப் பெறவேண்டும்” என்று விண்ணப்பித்தார். ஈசனும் 'சொல்லுக' என்றருளித் திருவுலாவைக் கேட்டார்.