பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

386

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


 மறுக்கிறான். அப்படி இன்ப துன்ப வேறுபாடுகளுடன் உலகத்தைக் கடவுள் படைத்திருந்தால், அக்கடவுள் பண்பில்லாதவன் என்பது கவிஞன் கருத்து.

மேலும் கவிஞன், “இந்த உலகம் இன்னாததாக இருக்கலாம் என்று அமைதி கொள்ளாதே; இனிய காண்க!” என்று ஆணையிடுகின்றான். “இனிய காண்க! இதன் இயல் புணர்ந்தோரே" என்பது சங்ககாலக் கவிஞன் வாக்கு!

இதே வாக்கினைச் சுந்தரர் அவிநாசியில் உயிர்ப்பிக்கிறார். ஒரு வீட்டில் மங்கல ஒலி முழங்கப் பிறிதொரு வீட்டில் அழுகை ஒலி கேட்க இரண்டும் உடன் நிகழ்வது ஏன்? என்று வினா எழுப்பி விடையும் கண்டார் சுந்தரர்.

ஆனால், நாம்தான் தொடர்ந்து இந்த இரு வேறு நிலையை மாற்றாமல் ஊழ் என்றும் விதியென்றும் சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலை நீடித்தல் விரும்பத்தக்கது அன்று.

சுந்தரர் வரலாறு முழுதும் நட்பின் இலக்கணம் பொதுளுகிறது. நட்பில் சிறந்து விளங்கச் சுந்தரர் வரலாறு துணை செய்யும். உயிர்த் தோழமை மனிதனை வளர்க்கும்; வாழ்விக்கும். நட்பு என்பது கடமை வழிப்பட்டது. சிறந்த நட்பில் பிழைகள் தெரியா. அப்படியே பிழைகள் ஒரோவழி தெரிந்தாலும் பிழைகளை ஏற்றுக்கொண்டு நட்பு பாராட்டுவதுதான் நட்பு.

குறைகளை மறந்துவிடுதல் மூலமே நட்பு வளரும். இதற்கு இலக்கியமாகத் திகழ்வது சுந்தரர் வரலாறு. நம்பியாரூரருக்கு வாய்த்த நண்பர்கள் இருதய சுத்தமான நண்பர்கள். சிவபெருமான், சுந்தரர், சேரமான் பெருமான் இவர்களிடையில் வளர்ந்த நட்பு எல்லையற்றது; அழிவற்றது. இத்தகு நட்பியல் நெறி நாட்டில் வளர வேண்டும்.

சுந்தரர் பாடிய பாடல்கள் ஏழாவது திருமுறையாக வரிசைப்படுத்தப் பெற்றுள்ளன. சுந்தரர் திருமுறையில் 100