பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/392

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
388
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 


சுந்தரர் அந்த வரலாற்றையே குறிப்பிட்டுப் பாடுகின்றார். அதுமட்டும் அல்லாமல் நஞ்சுண்டிருந்த அருமைப் பாட்டைச் 'சீலம்’ என்று போற்றுகின்றார்.

கோல மால்வரை மத்தென நாட்டிக்
கோளரவு சுற்றிக்கடைந் தெழுந்த
ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய
அமரர் கட்குஅருள் புரிவது கருதி
நீலம் ஆர்கடல் விடந்தனை உண்டு
கண்டத்தே வைத்த பித்தநீ செய்த
சீலங் கண்டுநின் திருவடி அடைந்தேன்
செழும்பொழில் திருப்புன்கூர் உளானே,
(7.55.5)

என்பது அந்தப் பாடல்.

சைவம் வினைக்கொள்கையில் நம்பிக்கை உடையது. “இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்” விதிக் கொள்கையிலிருந்து நற்றமிழ் நம்பியாரூரர் மேலும் வளர்ந்து இம்மைச் செய்தது இம்மையிலேயே பயன் கூட்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.

தீவினையிலிருந்து அகலத் துணை செய்யவேண்டியது நெஞ்சமே! அப்படித் துணை செய்யாத நெஞ்சத்தை 'மட நெஞ்சமே!' என்று அழைக்கிறார். ஏன் மனிதனுக்கு மனம் நல்லதைச் செய்வதில்லை.

இந்த உலகில் ஒருவரைக் குத்திப் படுகாயப்படுத்தி உடைமையைப் பறித்தல் போன்ற களவினால் வரும் பாவங்களும் யாராவது ஒருவரைப் பகைத்துக்கொண்டு அப்பகை காரணமாக அவர்க்கு இழைத்த தீமைகளால் வரும் பாவங்களும் அடுத்த பிறவி வரை நீட்டிக்கா. இப் பிறப்பி லேயே வந்து வருத்தத்தைத் தரும். இது சுந்தரரின் கொள்கை; கோட்பாடு.