பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புனித நெறி

37


“பேய்த் தேர்” என்று கூறுவர். இந்தப் பேய்த் தேரை, தண்ணீர் வேட்கையெடுத்த ஒருவன் தண்ணீர் வெள்ளம் என்று கருதிக் குடத்தினை எடுத்துக்கொண்டு தண்ணீர் எடுக்கச் சென்றால், அது எவ்வளவு பைத்தியக்காரத்தனமானது! பரிகாசத்துக்குரியது! அவனுக்குத் தண்ணீரும் கிடைக்காது; தாகமும் தணியாது. மேலும், பயன்படா முயற்சியில் ஈடுபட்டதால் ஆற்றலும் வீணாக்கப்பட்டது. அதுபோல் வாழ்வை வளர்க்காத - வாழ்வுக்குப் பயன் தராத கொள்கைவழிச் செல்லுதல் பயனற்றது.

கடவுள் உண்டு என்று நம்பி, கடவுளை எங்கும் எல்லாவற்றிலும் கண்டு, இதயக் கனிவுடன் ஏத்தி வழிபடுதல் உய்யும் நெறி, இன்ப நெறி. அதனை விடுத்து அறிவு என்ற பெயரில் அறியாமை பேசிச் சழக்குகளுக்குக் காரணமாகிய சாத்திரம் பேசி மயங்கி மையல் வலைப்படுதல் பாழ் நெறியாம். இப் போக்கு இம்மையிலும் துன்பம் தரும். ஆதலால், வல்லாளர்க்கு வல்லாளனாக விளங்கி வாழ்வளிக்கும் இறைவனை - திருப்பருப்பதத்தில் எழுந்தருளியுள்ள பரமனைப் போற்றி வழிபடுவதே புனித நெறி.

சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்
மடங்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப்பின்
குடங்கொண்டு நீர்க்குச்செல்வார் போதுமின் குஞ்சரத்தின்
படங்கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே.

- திருஞானசம்பந்தர்