பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


7
பத்திமையின் பண்பாடு

பத்திமை கொண்ட வாழ்க்கை தூயது. இனிமை நலம் மிக்கது. சழக்குகளைக் கடந்தது; வழக்குகளை வென்றது; மகவெனப் பல்லுயிரும் ஒக்கப் பார்க்கும் தண்ணளியுடையது. உண்மையான பத்திமை, வாழ்க்கையில் விளங்கினால் சிக்கல்கள் இல்லை; பகையில்லை. போரில்லை; சட்டங்களின் தொகுதியில்லை. மார்க்ஸ் மாமுனிவர் கண்ட அரசற்றசமுதாயம் அமையும். பண்பட்ட நிலத்தில் விளைச்சல் பெருகி உயர்வதைப் போலப் பத்திமைச் சமுதாயத்தில் அன்பு பெருகும்; அருள் வளரும்; எங்கும் சமநிலை காட்சியளிக்கும்.

இத்தகு பத்திமை வாழ்வு உள்ளத்தொடுபட்டது. பயிருக்கு வளம் தரும் மண்ணின் உரச்சத்து எளிதில் கண்ணுக்குப் புலனாவதில்லை. வளரும் பயிரின் வளம் கொண்டே மண்ணின் வளம் காண்கின்றோம். பத்திமை வாழ்வு உடலொடு தொடர்புடையதல்ல. உடல் ஒரு வாயிலே! ஆனால் முழுக்க முழுக்க உள்ளத்தோடு தொடர்புடையது. நெஞ்சில் பத்தி தழைத்தால் பாரினில் பண்பு தழைக்கும், இன்றோ, பத்திமை வாழ்க்கையின் வடிவங்களே கொலுவீற்றிருக்கின்றன; உணர்வில்லை. சடங்கு