பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தருமை ஞானசம்பந்தர். திருஞான சம்பந்தரும் பரபரப்பு கூடாதென்றார். பரபரப்பு கூடாதென்பது மட்டுமல்ல; பரபரப்புக்குரிய சூடு ஆற வேண்டுமென்கிறார். ஆக்கின சூட்டில் அள்ளித்தின்ன முடியாதல்லவா? சூடு ஆற வைத்துத்தானே சுவைத்து உண்டு மகிழவேண்டும். உள்ளமும் ஆற அமர நிதானித்து எண்ணிப்பழகும் இயல்பைப் பெற்றால் பகை வராது; பண்பு வளரும்; பக்தியும் வளரும்; பரமனும் அருள்வான்.

பத்திமைக்குக் கள்ளத்தனம் முரணானது. வஞ்சனை ஒழிந்தால்தான் வாழ்வியல் சிறக்கும். உதடு சிரிக்கிறது. ஆனால் உள்ளமோ பற்றி எரிகிறது. முகம் முகமன் உணர்வைக் காட்டுகிறது. ஆனால் முதுகுக்குப் பின்புறம் பேசப்படுகின்றது. பாராட்ட மனமில்லை. ஆனாலும், பாராட்டு நிகழ்கிறது. பிறர் ஏற்றங்கண்டு மகிழ மனமில்லை. ஏதேதோ பேசப்படுகிறது. கருத்து மாறுதல்கள் அல்லது தவறுதல்கள் திருத்தப்படக் கூடியவையே! ஆனால் அவை வஞ்சகத்திற்கு வித்திடக் கூடாது. இன்று எங்கும் வஞ்சகமே ஆட்சி செலுத்துகிறது. கள்ளம் ஒழிந்தால்தான் கங்காளரைக் காணலாம்.

சொல், உலகத்தில் மிக உயர்ந்தது. சொல்லே மனித உலகத்தை இணைக்கும் பாலம். சொல்லே உணர்வைத் தூண்டுகிறது; உள்ளன்பை வளர்க்கிறது; உறுதியைத் தருகிறது; உறவினை வளர்க்கிறது. பரமனையும் தருவது. இத்தகு ஆற்றலுடைய சொல்லை இன்றைக்கு நெறி தெரிந்து பயன்படுத்துவோர் எத்தனை பேர்? சொல்லில் நிகழ்ந்த சோர்வுதானே கோவலனின் உயிர் கொண்டது. நீதியிற் சிறந்த நெடுஞ்செழியனை அநீதிக்கு ஆளாக்கியது. சொற்களைத் தேர்ந்து பயன்படுத்த வேண்டும். அப்படிப் பயன்படுத்தத் தவறினாலும் குறைந்த அளவு சொற்களின் வெப்பத்தையாவது குறைக்க வேண்டும். சிலர் சொற்கள் செவியைச் சுடுகின்றன; நெஞ்சைச் சுடுகின்றன; உணர்வைச் சுட்டு