பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பத்திமையின் பண்பாடு

45


மனம், பயிர் வளர்தற்குரிய நிலம் திருந்தாமல் பயிரை வளர்க்க முடியாது. மனம் திருந்தாமல்-தூய்மையடையாமல் பத்திமை வாழ்க்கை வாழ்வது இம்மியும் முடியாது. பத்திமை வேடம் கொள்ளலாம். பஜனை செய்யலாம். ஆனால் அது பத்திமை வாழ்க்கையாகாது.

இறைவனை ஒன்றிய உணர்வுடன் ஏத்தி வழிபடுதல் வேண்டும். அலையும் மனம் கூடாது. வழிபடும் கடவுள் வடிவங்கள் பலவாகக் கூடாது. ‘இவர் தேவர், அவர் தேவர்’ என்று அலையக் கூடாது. வழிபாடு செய்யுங்காலத்தின் அளவால் பெருமை யுடையதாகிவிடாது. ஆரவாரச் சடங்குகளால் வழிபாடு சிறந்துவிடாது. வழிபாட்டுக்கு ஒன்றிய மனம் தேவை. இறைவன் திருவடியில் மனம் ஒன்ற வேண்டும்; பொருந்த வேண்டும். அதுவே வழிபாடு!

இறைவன் நாமத்தை நல்லவாறு சொல்லி வாழ்த்த வேண்டும். சிலர், நல்லவாறும் வாழ்த்த மாட்டார்கள். ‘பகைவர்களை அழித்து எனக்கு அருள் செய்க’ என்று இறைவனை வாழ்த்துதல் ஆரியமரபு. அங்ஙனம் வாழ்த்துதல் நெறியன்று. அவர்களுக்கு இறைவனும் அருள் பாலிக்க, மாட்டான். நல்லன கருதி, நல்லன சொல்லி, நல்ல வண்ணம் நன்றுடையானாக இருக்கின்ற இறைவனை வாழ்த்துதலே இறைவனை வாழ்த்தும் மரபு. இது தமிழ் மரபு. இங்ஙனம் வாழ்த்துதலே பக்திமைக்கு வித்து. பரமனருள் பெறுதற்குரிய வழி.

இங்ஙனம் பரபரப்பின்றி, கள்ளத்தனம் ஒழிந்து, காம உணர்வுடைய செயல்களிலிருந்து விடுதலை பெற்று, மனந்தூய்மையுடையவராகி இறைவன் திருவடிகளிடத்தில் அன்பு காட்டுதலையே பற்றெனக் கொண்டு ஒன்றிக் காதலித்து நல்லவாறே ஏத்தி வழிபட்டாலும் இறைவன் அருள் முழுநிலையில் முதிர்ந்து வெளிப்பட்டுவிடுவதில்லை. உயிரின் வளர்ச்சிக்குத் தகுந்தவாறு அளந்தே இறைவன்