பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



11
துறவு எது?

துறவு எது? துறவி யார்? என்பன போன்ற வினாக்கள் இன்றல்ல, நேற்றல்ல, பல நூறு ஆண்டுகளாகக் கேட்கப் பெற்றவை. இன்றும் கேட்கப் பெறுபவை. தமிழகம், தனக்கென ஒரு சிறந்த சமய நெறியைப்பெற்று விளங்கிய புகழுடையது. சேக்கிழார் தமிழகத்துச் சமய நெறியினைச் ‘செழுந்தமிழ் வழக்கு’ என்றார். இந்தச் செழுந்தமிழ் வழக்கு அயல் வழக்கை வென்று விளங்க வேண்டுமென்றார். திருஞானசம்பந்தர் வரலாற்றில் இந்தக் குறிப்பு நமக்குக் கிடைக்கிறது. இங்குச் சேக்கிழார் குறிப்பிடும் அயல் வழக்கு எது? சமண் சமயமே அயல் வழக்கு - சமண சமயம் கடுந்துறவின் பாற்பட்டது. அந்தச் சமணத்தை எதிர்த்தே திருஞான சம்பந்தர் கிளர்ச்சி செய்தார்.

மாணிக்கவாசகர் பெளத்தத்தைச் சந்தித்து இருக்கிறார்; பெளத்தத்தை வழக்காடி வென்றிருக்கிறார். அந்த வழக்கில் “நம் பெருமான் பெண்பால் உகந்தாடுகின்றானே” என்று பெளத்தர்கள் கேலி செய்திருக்கிறார்கள், மாணிக்க வாசகர்,

பெண்பா லுகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்
விண்பாலி யோகெய்தி வீடுவர்காண்.

என்று பதில் சொல்லுகிறார்.