பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12
முரண்பாடா?

எந்தை ஈசன் சலமிலன். அவன் பெயர் சங்கரன். குறியொன்றுமில்லாத கூத்து ஆடுபவன். அவன் அம்மையோடு அப்பனாக இருந்து அருள் வழங்குகின்றான். அன்னை உமையினைப் பிரியாமல் உடம்பிடம் கொடுத்தவன். அதனால் அவனைப் “பெண்பால் உகந்த பித்தன்” என்றும் அறியாதார் கூறுவர். ஆனால், தமிழக மக்கள் மங்கை பாகனை, குவளைக் கண்ணிக் கூறனை வழிபடுதலையே பெருவழக்காகக் கொண்டு வந்துள்ளனர். சங்கத் தமிழிலக்கியமாகிய ஐங்குறுநூறு “நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன்” என்று பாராட்டும். திருவள்ளுவரும் ஆதியாகிய சக்தியைப் பங்கிலே உடையவன் என்ற பொருட் குறிப்பிலேயே ‘ஆதிபகவன்’ என்று பாடினார். இறைவன் அருளும் மூர்த்தியாக விளங்கி அருள் செய்த பொழுதெல்லாம் அம்மையப்பனாகவே காட்சியளித்ததாக நம்முடைய திருமுறை கூறும். நம்முடைய மாணிக்கவாசகரும் இந்த அம்மையப்பன் திருக்கோலத்தை,

தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ்