பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மாட்டான். வினாக்களின் தொடர்ச்சியிலிருக்கும் வரை அறியாமையின் தொடர்ச்சி இருப்பதாகவே பொருள். அப்படியானால் வினாவிற்கு அறிவு முரண்பட்டதா? என்ற வினா தோன்றலாம். இல்லை, இல்லை! அறிவைப்பெறும் சாதனங்களில் தலையாயது வினாதானே! “நான் ஆர்? என்னுள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்?” என்ற வினாக்களை மாணிக்கவாசகரே கேட்கிறாரே! ஆனால், அறிவாக்கம் நோக்கிக் கேட்கப்படும் வினா வேறு. அறியாமைக்கு ஊட்டம் தரக் கேட்கப்படும் வினா வேறு. அறிவைப் பயனாகக் கருதிக் கேட்கப்படும் வினாவில் அறிவு வேட்கை தலைப்படும். ஆங்கு விவாத உணர்ச்சி இருக்காது. சிலர், தம்மை அறிஞர் என்று தாமே காட்டிக் கொள்வதற்கு வினா கேட்கின்றனர். அத்தகைய வினாவே அவர்களை அறியாதார் என்று அறிமுகப்படுத்துகிறது.

அறியாமை அகல, அறிவு பெறப் பல முயற்சிகள் தேவை. முதல் முயற்சி சிந்தித்தல். இன்று, சிந்தனைப் பழக்கம் பல்ருக்கு இல்லை. இன்று பலருடைய மூளை சத்திரம் போலத்தானிருக்கிறது. அதாவது, வீடு என்றால் அங்கேயே சிலர் வாழ்வர். சத்திரம் என்றால் வருவோரையும் போவோரையுமே பார்க்கலாம். அதுபோல், இன்று பலர் நூல்களைப் படிப்பது, மூளையில் ஏற்றிக்கொள்வது, திரும்ப ஒப்புவிப்பது என்ற பணிகளையே செய்வர்; சிந்திப்பதே இல்லை! சிந்திக்கின்ற மனிதன், வாழ்க்கையில் விபத்துக்களுக்கு ஆளாக மாட்டான். அவனுடைய அறிவு, நிலையானபடி முறையில் வளர்ந்து வரும்.

சிந்தனையைத் தொடர்ந்து கற்றல், அடுத்து அறிவு பெறும் முயற்சி. கற்பது என்பது உயிரின் இன்றியமையாத கடமை. கற்கும் முயற்சிக்குத் தானே கண்கள் தரப்பெற்றன. கற்றலையடுத்து வரும் முயற்சி, கேட்டல். கேட்டது, உயிரின் அறிவாக்கத்திற்கு ஒரு சிறந்த முயற்சி. எளிய முயற்சியும் கூட ஆனால், யாரிடம் கேட்கவேண்டுமோ, அவரிடம் கேட்காது