பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அறிவின் வாசனையே இல்லாத உயிர்கள், இன்று இறைவனை வழிபடுவதில்லை; தம் ஆவல்களையே வழிபடுகின்றன. இதனையே, வழிபாடென்று கருதி அறியாதவர்கள் நாத்திகம் பேசுகின்றனர்.

ஞான நிலையில் ஞானிகள் தொழுவதே வழிபாடு. இங்ஙனம் உலகியலறிந்து, அருளியல் உணர்ந்து, ஈசன் திறம் நினைந்து வழிபடாதார் எவ்வளவு கற்றென்ன? எவ்வளவு கேட்டென்ன? அவர்கள் எவ்வளவுதான் தெளிவாக விரிவுரைகள் செய்தாலென்ன? அவையெல்லாம் மீண்டும் மீண்டும் சேற்றிற்குள் இழுத்து அமிழ்த்தும் செயல் முறையேயாம். அவர்களுடைய அறிவையும் தெளிவையும் மதித்து ஏற்றுக்கொள்ள முடியாது என்று திருஞான சம்பந்தர் எடுத்துக் கூறுகின்றார். பூம்புகார்ச் சாய்க்காட்டில் எழுந்தருளியுள்ள ஈசனையே தெய்வம் என்று தெளிந்து வழிபடுவாரே வழிபடுபவர். அவர்களே கற்றல் கேட்டலுடைய பெரியார். அங்ஙனம் வழிபடத் தெரியாதவர்களின் தெளிவு, தெளிவன்று.

வையநீ ரேற்றானு மலருறையு நான்முகனும்
ஐயன்மா ரிருவர்க்கு மளப்பரிதா லவன்பெருமை
தையலார் பாட்டோவாச் சாய்க்காட்டெம் பெருமானைத்
தெய்வமாப் பேணாதார் தெளிவுடைமை தேறாமே.

- திருஞானசம்பந்தர்