பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14
குளிர் சாரற் கொடுங்குன்றம்

திருக்கொடுங்குன்றம் மிக உயர்ந்த மலை; வானைத்தொட்டுத் தழுவி உயர்ந்திருக்கும் மலை. மலை முகட்டில் மஞ்சு தவழ்கிறது. மழைபொழி மேகம் மலை முகட்டைத் தழுவித் தவழ்ந்து கிடப்பதாலும் மலை குளிர்ச்சி பொருந்தியிருக்கிறது. ஆங்கு வெப்பமில்லை; குளிர் சாரலாக விளங்குகிறது. கரும் புயலைப் பிறைச் சந்திரன் கிழித்துக்கொண்டு முன்னேறிச் செல்கிறது! ஆம்! முழுமதியன்று; ஆனாலும் முழுமதி ஆகக்கூடியது. குறை வடிவம் நீங்கி நிறை நல் வடிவம் பெற விரைந்து முன்னேறுகிறது கூனற்பிறை. இந்த இனிய காட்சியைத் திருஞானசம்பந்தர் பார்க்கிறார். வண்மைத் தமிழில் எழிலுற இனிய கவிதை பிறக்கிறது! இயற்கை எழிலில் தோய்ந்து கவிதை வருகிறது! நம்மையும் கவிதைவழி மலையழகில் ஈடுபடுத்துகிறார். இல்லை, திருஞானசம்பந்தர் ஞானத்தின் திருவுரு புறத்தியல் இயற்கையில் மட்டும் தோய்பவரல்லர். அந்த இயற்கையில் உயிராக விளங்கும் தத்துவத்திலும் திளைப்பவர். நம்மையும் திளைக்கச் செய்பவர்.