பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15
கடமையா? கடவுளா?

“கடமையைச் செய். அதுவே போதும்; கடவுள் வழிபாடு அவசியமில்லை” என்று குரல் கேட்கிறது! இந்தக் குரல் கொடுப்பவர்கள் தங்களை அப்பட்டமான புதிய பகுத்தறிவுவாதிகளாகக் கருதிக் கொள்கிறார்கள். “கடவுளை வழிபடுவதே கடமை. கடவுளை வழிபடாதவர் எந்தக் கடமையைச் செய்தாலும் பயனில்லை.” இப்படி மற்றொரு குரல் கேட்கிறது! இந்தக் குரல் கொடுப்பவர்கள் பழைமைவாதிகள். இவர்களுக்கு உலகம் இன்னமும் பின்னேதான் இருக்கிறது. எப்பொழுதும் உலகம் பின்னே கிடப்பதில்லை. நாளைய உலகம் முன்னே கிடக்கிறது. பழைமையாக இருப்பது குறையல்ல. ஆனால் முன்னோர் நெறி என்ன என்பதை உள்ளவாறு உணரவேண்டும். “கடமையைச் செய்; கடவுளை வழிபடு” என்று மூன்றாவது குரல் கேட்கிறது! இந்தக் குரல் நடைமுறை வாழ்க்கையொடு கூடியது; ஏற்றுச் செயற்படக்கூடிய குரலும் கூட. இந்தக் கருத்துப் போரில் ஆளுடைப் பிள்ளையார் எந்த அணியில் நிற்கிறார்? ஏழாம் நூற்றாண்டில் நடமாடியவர் ஆளுடைப் பிள்ளையார்; அவர் சமய நெறியாளர்; சமயசீலம் நிறைந்தவர்; சமய நெறியை உடலுக்கு உடுத்தும் உடையென இல்லாமல், உயிர்க்கு