பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நிற்கக் காப்பாகத் துணை செய்வன. இறைவனைச் சடங்குகளால் தொழும் அளவிலேயே தொழுகை முற்றுப்பெறாது. சடங்குகள் தொடக்க நிலையின. இறைவனைத் தொழுதலாகிய பயன் அல்லது சமய வாழ்க்கை அகநிறை அன்பால் அருளார்ந்த சீலத்தால், நீதியால், என்று முழுமை பெறுகிறதோ அன்றே இறைவனைத் தொழுதல் முழுமை நலம் எய்துகிறது.

சிலர், இறைவனைச் சடங்குகளால் தொழுகின்றனர். இல்லை; நாடகத்தால் நடிக்கின்றனர். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் அழுக்காறு அடங்கவில்லை; அழுக்காறு தோன்றுவதற்குரிய கூறுகளும் கெடவில்லை; அவாக்களால் அலைப்புறுகின்றனர்; வெகுளியால் வெந்து அழிகின்றனர்; கடுமொழி பேசுகின்றனர்; ஆங்காரத்தில் விஞ்சுகின்றனர்; பகைத் தீயால் பலருக்குத் துன்பம் செய்கின்றனர். தற்சார்பே தழைத்து நிற்கிறது; அநியாயமே ஆட்சி செய்கிறது; அநீதி அணிகலனாக விளங்குகிறது. இத்தகையோர் மனிதரில் “பொக்கு” போன்றவர். “பொக்கு” என்றால் உள்ளீடில்லாத பதர், “பொக்க மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பன்” என்பது அப்பரடிகள் வாக்கு. இத்தகையோர் சமய வேடங்கள் பூணலாம். ஆரவாரமான சமய சடங்குகளைச் செய்யலாம். ஆயினும் ஏன்? அது இறைவனைத் தொழுதலாகாது.

திருஞானசம்பந்தர் இறைவனைத் தொழும் நெறி காட்டுகிறார். இறைவனைத் தொழுதல் என்பதே இறைவனின் குணங்களை மேற்கொண்டு ஒழுகுதல் என்பதே பொருள். பொறிகளால் செய்யும் நூறாயிரம் சடங்கை விட புலன்களால் நின்றொழுகும் பண்பு ஒன்றேயாயினும் அதற்குரிய தகுதி உண்டு; பயன் உண்டு. பலநூறு பண்புகள் புலனில் நின்றொழுகுதலிலும் உயிர்க்கு அவற்றைப் பண்பாக சேர்த்தல் அதனிலும் விழுமியது. ஆதலால் வாழும் வாழ்க்கை முறையால் இறைவனைத் தொழுதல் சிறந்த தொழுகை முறை.