பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
88
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 


இறைவனுக்கு அடிமை! ஆம்! இறைவன் அருளே கருதி அடிமை பூணுதல்; வாழ்த்துவதன்றி வகையறியா வகையில் அடிமை பூணுதல்; திருவடியே பற்றுக்கோடாக அடிமை பூணுதல். அதுவே உண்மையான அடிமை! அத்தகைய அடிமைத் திறம் நாயன்மார்களிடத்தில் இருந்தது. இறைவனும் உவந்து கேட்டு அருளிச் செய்தான். அது மெய்யடிமை. இன்றோ, அருளியற் சூழலில் அடிமை என்ற சொல் வழக்கு அடிபடுகிறது. ஆனால் பொருள் வழக்கு இல்லை. இறைவன் பெயரால் ஓர் ஆதிக்கம் நடைபெறுகிறது; ஓர் ஆளும் வர்க்கம் உருவாக்கப்பெற்றுள்ளது. பல கோடி மனிதர்கள் அடிமைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். ஆம்! இன்று இறைவன் பெயரை அடியார் உச்சரிக்கும் பொழுதெல்லாம் கோயிற் காணிக்கைகள் நினைவிற்கு வருகின்றன; காணி, பூமிகள் நினைவிற்கு வருகின்றன. சாதி, சமூக நினைவுகள் வருகின்றன; இன, மொழி நினைவுகள் வருகின்றன. இவையெல்லாம் அருளியல் அடிமைப் பண்புகளா? இல்லை, இல்லை! இவையெல்லாம் இறைவன் பெயரில் நடக்கும் அடக்கு முறை ஆதிக்கம்! இந்த அடிமை, பொய்யடிமைத் தனமாகும். உடல், சிவத்தின் அடிமையாகக் கோலம் காட்டலாம். உதடுகள் சிவத்தின் அடிமையென்று சொல்லலாம். ஆனால் அந்தோ பரிதாபம்! உள்ளம் காணிக்கு, பூமிக்கு, காணிக்கைக்கு, சாதிச் சழக்குகளுக்கு, வம்புக்கு, பிழைப்புக்கு அடிமைப்பட்டிருப்பதை யார்தான் மறுக்க இயலும்? அதனாலே - பொய்யடிமைத்தனம் மிகுந்திருப்பதால் இறைவனும் பேச மறுக்கிறான். நாட்டில் நடமாட முன் வருகின்றானில்லை. அவன் பொய்யிலா அடிமை பூண்டவர்களுக்கே அருள் செய்பவன். பொய்யில், உண்மை கலக்கலாம். அதனால் பொய் உண்மையாக மாறி வளரும். ஆனால், உண்மையில் பொய் கலப்பது பாவத்திற் பாவம்! அருளியலில் பொய்யடிமைத்தனம் வேண்டாம். அருளியலில் பொய்யடிமையைத் தவிர்ப்பது உடனடியான தேவை.