பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உய்யும் நெறி
91
 

ஞாயிறுங்கூட உலகில் முற்றாக இருளை யகற்ற முடியவில்லை. கோடானுகோடி நூல்களும் கூட அறியாமையை அகற்றுவதில் வெற்றி பெற்றதில்லை. எண்ணிக்கையில் பலவாகிய திருக்கோயில்களும் ஆணவத்திற்குச் சாவுமணி அடிப்பதில் வெற்றிபெற்ற பாடில்லை.

உயிர், இருளை எதிர்த்துப் போராடுவதை, என்று தொடங்கியதோ தெரியாது. உயிரின் படைக் கலங்கள் வளர்ந்துள்ளன என்பது உண்மை. ஆனாலும் போரில் வெற்றி கிட்டியபாடில்லை. அறிந்ததைவிட அறியாததல்லவா அதிகமாக இருக்கிறது! முனைப்பல்லவா முந்துகிறது! தன்னலப் பேய் துறவியையே துரத்துகிறதே! அந்தோ! இன்றைய துறவும் மண்ணிலும், பொன்னிலும் எடு பிடியிலும் மமதைச் செருக்கிலும் படிந்து மாசுற்றிருப்பதை அறியாதார் யார்? ஆம்! ஞாலம் முழுதும் இருளகற்றி ஒளிப்பரப்பப் பல நூறாயிரம் கைகள் ஓயாது உழைக்கின்றன! வண்ணவிளக்குகள் சொலிக்கின்றன! ஒரே ஒரு நொடி, ஏதோ நிகழ்கிறது! இருள் சூழ்ந்து விடுகிறது! கண்களால் பார்க்க இயலவில்லை! கால்களால் நடமாட முடியவில்லை! சிந்தனை சிதறி ஓடுகிறது! அச்சம் கால் கொள்ளுகிறது! இது இன்றைய அனுபவம். ஆம்! இருள் வலிமையுடையது. அறியாமை ஆற்றலுடையது. இருளொடு போராடி வெற்றிபெற ஒளி மட்டும் போதாது. நாமே ஒளிமயமாக மாறவேண்டும். அறியாமை, அடர்த்து மோத வல்லது. வளர்ந்து வரும் அறிவையெல்லாம் எடுத்து விழுங்க வல்லது. அதனாலன்றோ, “அறிதோறறியாமை” என்றார் வள்ளுவர். இன்றும், நம்முடைய அறிவின் ஆற்றலைவிட அறியாமையின் தொகுதியே விஞ்சி நிற்கிறது. கற்றற்கு ஒன்றுமில்லை என்று எண்ணும் மனிதன் அல்லது சமூகம் வாழ்ந்து கொண்டிருந்தாலும் மரணத்தின் வாயிலில் புகுந்து விட்டதாகவே கருத வேண்டும்.