பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
92
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 


‘வளர்ந்த மனிதரையும், இருள் அனைத்து மயக்குகிறது; அறியாமை அச்சுறுத்துகிறது’ என்பதனை நம் திருஞானசம்பந்தர் எடுத்துக் கூறும் முறை வியந்து பாராட்டுதலுக்குரியது. எம்பெருமான் மன்பதை உலகிற்குத் தீங்கு செய்த கடக்களிற்றை அடக்கி ஒடுக்கி அதனுடைய தோலையுரித்து அணிந்து கொள்கிறான். இச் செயல் நிகழும் பொழுது அப்பனுடனிருந்த அவனது அருளாற்றலாகிய - பரஞானமேயாகிய அம்மை அஞ்சி, அப்பனை அணைத்து அவனுள் ஒடுங்கியதாகக் கூறுகிறார். ஏன்? இந்தப் பாடலுக்குச் சொற்களால் பொருள் காண்பது பயனற்றது. இஃதொரு தத்துவப்பிழிவு. இல்லை, வாழ்வியல் படிப்பினை! அருளே ஆற்றலாகவுடைய, முழு ஞானமே திருவுடலாகவுடைய உமையே அஞ்சுகிறாள் என்பது அன்னையின் அச்சத்தை உணர்த்த வந்த இடமன்று. நம்மை, உடன் பிறந்தே கொல்லும் வியாதியெனப் பற்றி அழிக்கும் ஆணவத்தின் கொடுமையை உணர்த்த வந்தது. இருள்மலப் பிடிப்பில், ஆணவச் செருக்கில் சிக்குண்ட மனிதன் தேறுதல் அரிது. அவன் அறியாமையையே அறிவெனப் போற்றுவான். மதம் பிடித்த யானை, பாகனையும் மீறிப் பல திசைகளிலும் ஓடித்திரிவதைப் போல அவனும் அலைந்து திரிவான். அந்தப் பச்சை ஆணவத்தின் தோலை யுரித்து, பக்திப் புனலில் நனைத்துப் பதப்படுத்தித் தொண்டு எனும் தூய வெய்யிலில் காயப்போட்டு வாழ்ந்தாலே வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

இருள் கொடியது. அறியாமை, பாவம். மயங்குதல் மதியைக் கெடுக்கும். அடங்காமை ஆரிருள் உய்க்கும். புலனில் அழுக்கு புண்ணியத்தைக் கெடுக்கும். ஊனின் பெருக்கம் உயிரின் ஆக்கத்தைக் கெடுக்கும் என்று தெரிந்து தெளிதலே வாழ்க்கையின் தொடக்கம். எந்த நொடியிலும் வழுக்கி வீழாமல் அறியாமையோடு பொருதும் போர்க் குணம் மாறாமல் தாழ்வெனும் தன்மையோடு தவம் பல இயற்றித் திருத்தொண்டு செய்து வாழுதலே வாழ்வாங்கு