பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


“தாழ்வெனும் தன்மை நோக்கிச்
சைவமாம் சமயம் சாரும்
ஊழ்பெறல் அரிது”

என்று அருணந்திசிவம் கூறுவார். “கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை” என்று கூறுவார் மாணிக்கவாசகர். திருத்தொண்டத் தொகையின் தோற்றமே இதற்கு ஒரு சான்று. தொண்டர்நாதனைத் தூதனுப்பிய நம்பியாரூரர், “அடியார்க்கும் அடியேன்” என்று பாடும் நிலை அடக்கத்தின் அருமையை-பயனை விளக்கத்தானே! ஆதலால் மாணிக்கவாசகர் தம்மை வியந்து பாராட்டிக் கொள்வதில்லை. திருவாசகம் முழுதும் தாழ்வின் தன்மையே பரவிக்கிடக்கிறது. மாணிக்கவாசகர் தனது தகுதியை அங்கீகரித்து ஒப்புக் கொண்டதில்லை! வியந்து பாராட்டிக் கொண்டதும் இல்லை. இறைவனின் அளப்பரும் கருணையே ஆட்கொண்டது என்பார். ஆயினும் மாணிக்கவாசகர் இறைவனின் அருமையை-ஆட்கொண்டருளிய அருமையை உணரவில்லை; அறிந்து கொள்ளவில்லை என்கிறார்.

மழலை மொழி பேசும் குழந்தை; விளையாட்டுப் பிள்ளை. பிள்ளை கையில் தங்கக் கிண்ணம் கிடைத்தது. குழந்தைக்குத் தங்கக் கிண்ணம் தேவையா? விளையாட்டுப் பொம்மை தேவையா? தின்னும் மிட்டாய் தேவையா? பருவத்தின் இச்சையே தேவை; அதுவே வெளிப்படும். குழந்தை தங்கக் கிண்ணத்தின் மதிப்பறியாது. தங்கக் கிண்ணத்தைத் தந்து அதற்கு ஈடாக ஒரு பொம்மையை அல்லது ஒரு மிட்டாயை வாங்கினாலும் வியப்பில்லை. அது போல மாணிக்கவாசகர் செய்யவில்லை. ஆனால் மாணிக்கவாசகர் இந்த உண்மையைத் தமது ஆன்மிக வாழ்க்கைக்குச் சான்றாகக் காட்டுகிறார். ஏன்? மாணிக்கவாசகரைப் போல இறைவனின் அருமையை உணர்ந்தவர்களும் இல்லை; தேடினவர்களும் இருந்ததில்லை. அந்தண வாழ்வைத் துறந்து