பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருவாசகம் முழுதும் தாயன்பு பரிணமித்துள்ள. “அன்னைப் பத்து” என்றே ஒரு பதிகம், திருவாசகத்தில் உண்டு.

தாய்!-மகவைப் பெற்று வளர்ப்பவள் தாய்! ஆனாலும் மகவைப் பெறுபவர்கள் எல்லாரும் நல்ல தாயாகிவிடுவதில்லை. தாயிலும் தரங்கள் உண்டு. ஈன்றெடுத்த மகவு அழுதாலும் பாலூட்டாத தாயும் உண்டு. இந்தக் காட்சியைப் பெரும்பாலும் வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏழைகள் வீட்டில் காணலாம். தாயும் உடலுழைப்பில் ஈடுபட்டுப் பொருளீட்ட வேண்டும்; வீட்டிலும் வேலை பார்க்க வேண்டும். களியாட்டமோ பொழுதுபோக்கோ இல்லாத நிலையில் பல குழந்தைகளுக்குத் தாயாகிறாள். அதனால் உடலில் சோர்வு; வாழ்வின் சுமை ஆன்மாவில் அழுத்தும் போக்கு; அலுத்தும் சலித்தும் வாழும் நிலை! இந்தச் சூழ்நிலையில் வாழும் தாய்மார்கள் விரும்பினாலும் நற்றாயாக வாழமுடிவதில்லை. இது ஏழைத் தாயின் நிலை! இது அவள் குற்றமல்ல. சமூகத்தின் குற்றம். இனி, தான் பாலூட்டாமல் மாற்றுத் தாயின் மூலம் பாலூட்டும் தாயும் உண்டு. இது செல்வச் செழிப்பில் நிகழ்வது. இது வாழும் கலையறியாத குடும்பங்களில் காணப்படும் காட்சி! இளமை-அழகில் உள்ள கவர்ச்சியின் விளைவு. இது அடாவடித்தனம்; இயற்கையை இகழ்ந்த வாழ்வு. சில தாய்மார்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டதும் வந்து பாலூட்டுவர். இது வேறு பல பணிகளில் ஈடுபடுவதின் விளைவு; கவனத்தில் சோர்வு! சில தாய்மார்கள் குழந்தைகள் அழாமலே காலக் கணிப்புடன் குழந்தைக்குப் பசிக்கும் என்றெண்ணிப் பாலூட்டுவர். இந்த மண்ணில் இவர்களே தாய்மார்கள்-நல்ல தாய்மார்கள்! வணக்கத்திற்குரிய தாய்மார்கள்! வரலாற்றில் இடம் பெறும் தாய்மார்கள்!

மாணிக்கவாசகர் இந்த நற்றாயினும் சிறந்த தாயை அறிமுகப்படுத்துகிறார். நினைந்தூட்டும் தாய் குழந்தையை மறப்பதுண்டு. மறதியைத் தொடர்வதுதானே நினைப்பு.