பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

111


சிந்தனை மறவாமல் இருந்தார். அவர்தம் வாழ்க்கையே தவமாக விளங்கியது.

அரிமர்த்தன பாண்டியன், போருக்கு அரசுக்கு குதிரைகள் வாங்க எண்ணினான். கிழக்குக் கடற்கரையில், அரபு நாட்டுக் குதிரைகள் வந்திருப்பதாகவும் செய்திகள் கிடைத்தன. அரசன், அமைச்சர் வாதவூரரை அழைத்துக் குதிரைகள் வாங்கி வரும்படி பணித்தான். அறநெறியில் வளர்ந்து, சமுதாயச் சிந்தனையில் தழைத்து தவத்தில் முதிர்ந்திருந்த வாதவூரருக்குக் குதிரை வாங்குவதில் விருப்பமில்லை. ஏன்? குதிரைகள் அழகுக்குப் பயன்படும். அல்லது போருக்குப் பயன்படும். போர், மனித உலகத்திற்குத் தீயது. எந்தச் சூழ்நிலையிலும் போரைத் தவிர்க்க வேண்டும். அரசுக்கு மக்கள் வரி செலுத்தவது ஆள்கிறவர்கள் ஆரவாரத்துடன், ஆடம்பரமாக வாழ்வதற்கு அல்ல, மக்கட் சமுதாயத்தின் தேவை பலப்பல! ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பமும் தனித்தனியே அந்தத் தேவைகளை நிறைவு செய்துகொள்ள இயலாது. கல்வி, மருத்துவம், காவல், பாதுகாப்பு, உத்தரவாதம் போன்றவற்றை அரசுதான் செய்ய இயலும். ஏன்? அரசிடம் மட்டுமே தொகுப்பு நிதியம் இருக்க வாய்ப்பு இருக்கிறது; மேலாண்மையும் இருக்கிறது. அதனாலேயே “நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே” என்று புறநானூறு பேசுகிறது. ஆதலால், வாதவூரருக்குக் குதிரைகள் வாங்க தொடக்க நிலையில் முழு விருப்பம் இல்லை. ஆயினும் அரசின் ஆணையை மேற்கொண்டு கிழக்குக் கடற்கரையில் உள்ள திருப்பெருந்துறைக்கு வருகிறார். திருப்பெருந்துறையை அணுக, அணுக வாதவூரரின் சிந்தனை வளர்கிறது. குதிரைகள் வாங்க ஒருப்படவில்லை. இதற்கு முதற் காரணம் தவம் பயந்த நெஞ்சம்! குதிரைகள் வாங்குவதற்குப் பதிலாகத் திருக்கோயில் கட்டுகிறார். அரசின் பணம் அரசின் ஆணை