பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தலையாய வழி! மற்றவர்களுக்கு ஊறு விளைவிப்பதில்லை என்ற நோன்பு மேற்கொள்வதாலும் பிணக்கினைத் தவிர்த்துப் பெருவாழ்வு வாழலாம்.

பொதுவாகப் பிணக்குகளைத் தவிர்த்து வாழ்தல் மனிதம் சிறக்க வழி! பிணக்குகள், சிறியன சிந்தித்து, சிறியன செய்வோர் மாட்டே தோன்றும்! பெரியதாக நினைப்பது, விரிந்த பரந்த மனப்பான்மையைப் பெறுவது, நம்பிக்கையுடனும் நல்லெண்ணத்துடனும் பழகுவது, உறவுக்கு முதலிடம் கொடுப்பது, யார் மாட்டும் அடக்கமாக இருப்பது ஆகிய நற்பண்புகளை மேற்கொண்டொழுகுதல் பிணக்குகளைத் தவிர்க்க வழி! பிணக்கு தீய பண்பு. திருவருளுக்கு எதிரானது. ஒருமைக்குப் பகை பிணக்கு. பிணக்கு உடையோர் இம்மையிலும் வாழ்வாங்கு வாழ்தல் இயலாது; மறுமையிலும் பயன் எய்தார். ஆதலால் பிணக்கில்லாத பெருவாழ்வு வாழ முயல்வோமாக!

திருப்பெருந்துறை திருத்தலம்! நமது மலம் மூன்றும் கெட, சிவானந்த வெள்ளம் மேவிய, குதிரைச் சேவகனாய் எழுந்தருளிய பெருமான் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பதால் திருப்பெருந்துறையை வாழ்த்து மின்! திருப்பெருந்துறையை வாழ்த்தின் பிறவிக் காட்டின் கருவும் கெடும்! திருப்பெருந்துறை பிணக்கிலாத பெருந்துறை, பிணக்கிலாமையால் பெருந்துறையாயிற்று. பெருந்துறை ஊர், தலம்! ஆங்குப் பிணக்கு இலாதார் வாழ்ந்தமையால் அது பெருந்துறையாயிற்று. பெருந்துறை! திருப்பெருந்துறை! திருநலஞ்செறிந்த திருப்பெருந்துறை! மக்களாகப் பிறந்தோர் அனைவரும் விரும்பும் பெருந்துறை! பெருந்துறை பெருந்துறை என்று பேசியே துன்பங் கெடுத்து வாழலாம். இருளகற்றி இன்பம் பெருக்கித் துன்பத்தின் தொடர்பு அறுத்து வாழ்தல் கூடும் திருப்பெருந்துறையைச் சார்ந்தால்! திருப்பெருந்துறைப் பெருமானே! ஆன்மாக்களிடத்தில் பிணக்கிலாத பெருமானே! உன்னை ஏசினும் ஏத்தினும்